Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/குன்னப்பட்டு ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள்; ஜப்பான் சிட்டி நகர தொழிற்சாலைகளுக்கு வேண்டுகோள்

குன்னப்பட்டு ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள்; ஜப்பான் சிட்டி நகர தொழிற்சாலைகளுக்கு வேண்டுகோள்

குன்னப்பட்டு ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள்; ஜப்பான் சிட்டி நகர தொழிற்சாலைகளுக்கு வேண்டுகோள்

குன்னப்பட்டு ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள்; ஜப்பான் சிட்டி நகர தொழிற்சாலைகளுக்கு வேண்டுகோள்

ADDED : பிப் 11, 2024 11:26 PM


Google News
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில், 50 ஊராட்சிகள் உள்ளன. இதில், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை சார்ந்த 20 ஊராட்சிகளில், தொழிற்சாலைகள், கல்லுாரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி சுய வருமானம் கொண்டவையாக உள்ளன.

மீதமுள்ள ஊராட்சிகளில், மானாமதி, ஆமூர், பெரியவிப்பேடு, பெரியஇரும்பேடு, அருங்குன்றம், மடையத்துார் உள்ளிட்ட ஊராட்சிகள், அரசு தரும் வருவாயை வைத்து இயங்கும் நிலையில் உள்ளன.

கடந்த 50 ஆண்டுகள் வரை, திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய குன்னப்பட்டு ஊராட்சியும், அந்த வகையில் தான் இருந்து வந்தது.

கடந்த 2007ல், முன்னாள் முதல்வர் கருணாநிதி, குன்னப்பட்டு ஊராட்சிக்கு வந்து, அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டதை தொடர்ந்து, மவுசு கூடியது. கடந்த 2011ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திருப்போரூர் அருகே ஜப்பான் தொழில் நகரம் உருவாக்கப்படுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஜப்பான் தொழில் நகரம் என கூறப்படும் ஒன் ஹப் சென்னை என்ற தொழிற்பேட்டை குன்னப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 650 ஏக்கர் பரப்பில் அமைந்தது. இங்கு சாலை வசதிகள், வடிகால்வாய்கள், சிறு பாலங்கள், மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

தற்போது, ஹிட்டாச்சி, அஜினமோட்டா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இத்தொழில் பூங்காவில் இயங்கி வருகின்றன.

இதில், குறிப்பிட்ட சதவீதத்தை, சி.எஸ்.ஆர்., எனும் சமூக பொறுப்புணர்வு நிதி ஒதுக்கி, சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும்.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு சி.எஸ்.ஆர்., நிதியை தொழிற்சாலைகள் அமைந்த குன்னப்பட்டு ஊராட்சிக்கு செலவிடவில்லை என, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கூட முறையாக பூர்த்தியடையவில்லை.

இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:

குன்னப்பட்டு ஊராட்சியில் தொழிற்சாலைகள் அமைவதற்கு முன், பல ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டது.

அப்போது, வேலை வாய்ப்பு தருவதாகவும், கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும், கூறி நிலத்தை பெற்றனர்.

தற்போது, 7 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கிராமம் முன்னேறவும், மக்கள் வாழ்வாதாரம் மேம்படவும் சி.எஸ்.ஆர்., நிதி மூலம் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்.

இதற்கு, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டரிடம் மனு

குன்னப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:குன்னப்பட்டு- -- பஞ்சந்திருத்தி செல்லும் சாலை, கடந்த மிக்ஜாம் புயல் மழையால் சேதமானது. இதனால், அரசு பேருந்தும் வருவதில்லை. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்று அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.குன்னப்பட்டு இருளர் பகுதியில், 40 குடும்பங்கள் உள்ளன. இதில், 20 குடும்பங்களுக்கு மின்சார வசதி இல்லாமல், பள்ளி குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். மின் வசதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.குன்னப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us