Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூடுவாஞ்சேரியில் மின் பிரச்னைக்கு தீர்வு காண 9 இடத்தில் உதவி பொறியாளர் அலுவலகம்

கூடுவாஞ்சேரியில் மின் பிரச்னைக்கு தீர்வு காண 9 இடத்தில் உதவி பொறியாளர் அலுவலகம்

கூடுவாஞ்சேரியில் மின் பிரச்னைக்கு தீர்வு காண 9 இடத்தில் உதவி பொறியாளர் அலுவலகம்

கூடுவாஞ்சேரியில் மின் பிரச்னைக்கு தீர்வு காண 9 இடத்தில் உதவி பொறியாளர் அலுவலகம்

UPDATED : ஜூன் 14, 2025 10:33 AMADDED : ஜூன் 13, 2025 07:55 PM


Google News
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண, ஒன்பது இடங்களில் புதிதாக, உதவி பொறியாளர் அலுவலகம் திறக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகள் மற்றும் திருப்போரூர், காட்டாங்கொளத்துார் ஒன்றியங்களை உள்ளடக்கிய, 89 ஊராட்சிகளுக்கு, மின்வாரிய தலைமை அலுவலகமாக, மறைமலை நகர் மின் கோட்டம் உள்ளது.

மறைமலை நகர் மின் கோட்டத்தின் கீழ் பொத்தேரி, மறைமலை நகர், படப்பை, ஊனமாஞ்சேரி, நல்லம்பாக்கம், மாம்பாக்கம், படூர், ஆலத்துார், திருப்போரூர், நெல்லிக்குப்பம், கண்ணகப்பட்டு ஆகிய இடங்களில், 110/11 கே.வி., துணை மின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தவிர, மறைமலை நகர், சிட்கோ, கூடுவாஞ்சேரி, காயரம்பேடு, தைலாவரம், கோவிந்தபுரம், நாவலுார், கேளம்பாக்கம், புதுப்பாக்கம் ஆகிய இடங்களில், 33/11 கே.வி., துணை மின் நிலையங்கள் உள்ளன.

இதில், மின் விநியோகம் தொடர்பாக, மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகங்கள், 19 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தையூர், மறைமலை நகர் சிட்கோ, பொத்தேரி, காயரம்பேடு, நெல்லிக்குப்பம், புதுப்பாக்கம், மாம்பாக்கம், கோகுலாபுரம், மண்ணிவாக்கம், நாவலூர் ஆகிய ஒன்பது பகுதிகளில், புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஒன்பது பகுதிகளிலும் தற்போது, 90,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.

ஆனால், இப்பகுதியில் வசிப்போர் மின் விநியோகம் தொடர்பாக புகார் அளிக்க, தனியாக மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் இல்லை.

இதனால், இப்பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், அருகிலுள்ள மற்ற உதவி பொறியாளர் அலுவலகங்களுக்கு சென்று புகார் அளித்தனர்.

இந்த வகையில், தினமும் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வருவதால், அவர்களால் இந்த ஒன்பது பகுதிகளுக்குரிய மின் விநியோக பிரச்னைகளை தீர்ப்பதில் காலதாமதம் நிலவியது.

இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், மேற்கண்ட ஒன்பது இடங்களிலும் புதிதாக உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது:

மறைமலை நகர் மின்கோட்டத்தில் உள்ள கேளம்பாக்கம், மறைமலைநகர் பகுதி - 2, காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், மாம்பாக்கம், வண்டலுார், படப்பை ஆகிய எட்டு இடங்களில் செயல்படும் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தின் கீழ், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.

மேற்கண்ட எட்டு பகுதிகளிலிருந்து மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, கூடுதலாக ஒன்பது இடங்களில், உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்கவும், தேவையான ஊழியர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கேளம்பாக்கத்திலிருந்து தையூர், மறைமலை நகர் பகுதி - 2லிருந்து சிட்கோ மற்றும் கோகுலாபுரம், காட்டாங்கொளத்துாரிலிருந்து பொத்தேரி, கூடுவாஞ்சேரியிலிருந்து காயரம்பேடு உள்ளிட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டு, புது உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படுகிறது.

மேலும், திருப்போரூரிலிருந்து நெல்லிக்குப்பம், மாம்பாக்கத்திலிருந்து புதுப்பாக்கம், வண்டலுாரிலிருந்து மண்ணிவாக்கம், படப்பையிலிருந்து நாவலுார் ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டு, அங்கு புதிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்கள், ஒரு மாத காலத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும். இதனால், மறைமலை நகர் கோட்டத்தில் உள்ள 19 உதவி பொறியாளர் அலுவலகங்கள், இனி 28 என, எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதன் வாயிலாக, மின் நுகர்வோர் பிரச்னை விரைந்து தீர்க்கப்படும்.

தவிர, கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுாரில், புதிதாக 110/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள், அது பயன்பாட்டிற்கு வரும்.

இதனால், மறைமலை நகர் மின் கோட்டத்தில், மின் விநியோக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய உதவி பொறியாளர் அலுவலகம் விபரம்

புதிய அலுவலகம் மொபைல் எண்


தையூர் 9499931301

சிட்கோ 9499931302

பொத்தேரி 9499931303

காயரம்பேடு 9499931304

நெல்லிக்குப்பம் 9499931305

புதுப்பாக்கம் 9499931306

கோகுலாபுரம் 9499931307

மண்ணிவாக்கம் 9499931308

நாவலூர் 9499931309





      Our Apps Available On




      Dinamalar

      Follow us