Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஆலம்பரைகுப்பம் மீன்பிடி துறைமுகம் திட்டம்...தாமதம்: ஐந்தாண்டாக பணி துவங்காமல் மீனவர்கள் விரக்தி

ஆலம்பரைகுப்பம் மீன்பிடி துறைமுகம் திட்டம்...தாமதம்: ஐந்தாண்டாக பணி துவங்காமல் மீனவர்கள் விரக்தி

ஆலம்பரைகுப்பம் மீன்பிடி துறைமுகம் திட்டம்...தாமதம்: ஐந்தாண்டாக பணி துவங்காமல் மீனவர்கள் விரக்தி

ஆலம்பரைகுப்பம் மீன்பிடி துறைமுகம் திட்டம்...தாமதம்: ஐந்தாண்டாக பணி துவங்காமல் மீனவர்கள் விரக்தி

ADDED : மார் 11, 2025 07:53 PM


Google News
Latest Tamil News
இடைக்கழிநாடு:செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு - விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில், 235 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவெடுக்கப்பட்ட ஆலம்பரைகுப்பம் மீன்பிடி துறைமுகம் திட்டம், ஐந்தாண்டுகளாக கிடப்பில் உள்ளது. மீன்பிடி தொழில், மீனவர் வாழ்வாதாரம் மேம்பட, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு பேரூராட்சி, ஆலம்பரைகுப்பம் பகுதி வரை, 36 மீனவ பகுதிகள் உள்ளன.

இப்பகுதியில் வசிக்கும் மீனவர்களில், 8,500க்கும் மேற்பட்டோர், கடலில் மீன் பிடித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

கடலில் மீன் பிடிக்க, 'பைபர்' படகுகளைப் பயன்படுத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் உள்ள ஆலம்பரைகுப்பம், விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள மரக்காணம் பேரூராட்சி, அழகன்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களிடம், ஆழ்கடல் 'லாஞ்ச்' படகுகளும் உண்டு.

நீண்ட கால கடலரிப்பு பாதிப்பால், கடற்கரையில் இந்த படகுகளை நிறுத்த இயலவில்லை. ஆழ்கடல் படகுகளில் நிறுத்த சென்னை, கடலுார் ஆகிய நீண்ட துாரத்தில் உள்ள துறைமுகங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இதனால் நேரமும், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கவும், மீனவர்களின் வாழ்வாதாரம், மீன்பிடி தொழில் ஆகியவை மேம்பாட்டிற்காகவும், ஆலம்பரைகுப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்குமாறு, இப்பகுதி மீனவர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்ட கடற்கரை எல்லைப் பகுதியான ஆலம்பரைகுப்பம் - அழகன்குப்பம் இடையே, வங்கக் கடல் - பகிங்ஹாம் கால்வாய் கழிமுக பகுதியில், மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

மீன்வளத்துறை சார்பில் இத்திட்டத்தை, 150 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்துவதாக, கடந்த 2020 சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

துறைமுகத்தை 8.44 ஏக்கர் பரப்பில் அமைக்க திட்டமிட்டு, இடம் தேர்வு செய்யப்பட்டது. பின், கடந்த 2021ல் திட்ட மதிப்பீடு 235 கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது.

துறைமுகம் அமையவுள்ள இடத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்காக, அதற்கான ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மீனவர்கள் உள்ளிட்டோரின் கருத்தை கேட்டறிந்தது.

சில தன்னார்வ நிறுவனத்தினர், மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டால், பகிங்ஹாம் கால்வாய் கழிமுக பகுதி பல்லுயிர்கள் வாழ்வியல் இயற்கைச்சூழல் பாதிக்கப்படும் என, இத்திட்டத்தை எதிர்த்தனர்.

இதுதொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு, திட்டத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. தற்போது, ஆலம்பரைகுப்பம் மீன்பிடி துறைமுகம் திட்டம், ஐந்தாண்டுகளாக கிடப்பில் உள்ளது.

எனவே மீன்பிடி தொழில், மீனவர் வாழ்வாதாரம் மேம்பட, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:

எங்கள் கோரிக்கையை ஏற்று, அரசு மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கியது. துறைமுகம் அமைத்தால், மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி, பல வகைகளில் மற்றவர்களுக்கும் பயன் கிடைக்கும்.

ஆனால், சில தன்னார்வ நிறுவனத்தினர் வேண்டுமென்றே தடுக்கின்றனர். ஐந்து ஆண்டுகளாகியும், துறைமுக திட்டம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு தீர்வு கண்டு, விரைந்து திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

செங்கல்பட்டு மாவட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து, கடலுார் மாவட்ட மீன்வளத் துறையினர் தான், இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர். தற்போது மதிப்பீடும் உயர்ந்திருக்கலாம். சுற்றுச்சூழல் தாக்க அனுமதிக்காக, திட்டம் தாமதமாகிறது. அனுமதி கிடைத்தால், ஆலம்பரைகுப்பம் துறைமுக பணிகள் துவக்கப்படும்.

-மீன்வளத்துறை அலுவலர்

திட்டத்தின் சிறப்பு


கடலரிப்பைத் தடுக்க நேர்கல் தடுப்பு, படகு அணையும் சுவர், படகு பழுது பார்ப்புக்கூடம், நிர்வாக அலுவலகம், வங்கி உள்ளிட்டவற்றுடன் துறைமும் அமையும்.விசைப்படகுகள், ஆழ்கடல் படகுகள் என, 800 படகுகளை நிறுத்தலாம். இதனால் சென்னை, கடலுார் ஆகிய துறைமுகங்களில் நெரிசல் குறையும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us