Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா திட்டம்... கைவிடல் * தேர்வான இடம் நீர்பிடிப்பு என்பதால் அரசு முடிவு

வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா திட்டம்... கைவிடல் * தேர்வான இடம் நீர்பிடிப்பு என்பதால் அரசு முடிவு

வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா திட்டம்... கைவிடல் * தேர்வான இடம் நீர்பிடிப்பு என்பதால் அரசு முடிவு

வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா திட்டம்... கைவிடல் * தேர்வான இடம் நீர்பிடிப்பு என்பதால் அரசு முடிவு

ADDED : ஜூன் 26, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
சென்னை, சென்னை வெளிவட்ட சாலையில், 1,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு கைவிடுகிறது. இதற்காக செங்குன்றத்தில் தேர்வான இடம் மழை நீர்பிடிப்பு பகுதி என்பதாலும், இந்த சாலையில் தேவைக்கேற்ப ஒரே தொகுப்பாக அதிக இடம் இல்லாததாலும், திட்டத்தை கைவிடும் முடிவுக்கு அரசு வந்துள்ளது.

சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விரைவான போக்குவரத்து சேவைக்கும், வண்டலுார் - மீஞ்சூரை இணைக்கும் வகையில், 2,156 கோடி ரூபாயில், சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது, 62 கி.மீ., துாரம் உடையது.

சென்னையை ஒட்டியுள்ள இந்த சாலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள வண்டலுார், தாம்பரம், படப்பை, பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் பல தொழிற்சாலைகள், வெளிவட்ட சாலை வழியாக எண்ணுார் துறைமுகத்திற்கு சரக்குகளை அனுப்புகின்றன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி, சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக, சென்னை வெளிவட்ட சாலை உருவெடுத்து வருகிறது.

எனவே, இந்த வெளிவட்டசாலையை ஒட்டிய பகுதிகளில், தொழில் பூங்காவை அரசு அமைக்க வேண்டும் என, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தின.

இதையேற்று, வெளிவட்ட சாலையில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில், 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் திட்டமிட்டது.

அந்த பூங்காவுக்கு, வெளிவட்ட சாலையில் செங்குன்றம் அருகில் இடம் கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளிடம், தொழில் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

அதில், அடையாளம் காணப்பட்ட இடம் மழை நீர்பிடிப்பு பகுதி என்பது உறுதியானதால், தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா அமைக்க திட்டமிட்ட இருந்த இடம், நீர்பிடிப்பு பகுதி என்று, சி.எம்.டி.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு தொழில்பூங்கா அமைக்க முடியாது. எனவே, வேறு இடங்களை தேர்வு செய்து, ஏதாவது ஒரு இடத்தில் தொழில் பூங்கா அமைக்க ஆலோசிக்கப்பட்டது .

இது தொடர்பாக, பல இடங்கள் பார்வையிடப்பட்டன. இருப்பினும், தொழில் பூங்கா அமைப்பதற்கு ஏற்றபடி ஒரே தொகுப்பாக, 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்ய முடியவில்லை. எனவே, வெளிவட்ட சாலையில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிடுவது என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us