Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கையில் 70 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க...அனுமதி!:விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

செங்கையில் 70 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க...அனுமதி!:விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

செங்கையில் 70 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க...அனுமதி!:விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

செங்கையில் 70 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க...அனுமதி!:விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

ADDED : ஜூலை 03, 2024 10:31 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 70 ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் முறையாக விண்ணப்பித்து, விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.

இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில், விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இதனால், விவசாய நிலங்களில் வண்டல் மண் பயன்படுத்தினால், ரசாயன உரங்கள் பயன்பாடு குறையும். உலர் நிலங்களில் வண்டல் மண் பயன்படுத்தினால், மண் மாற்றம் ஏற்படும்.

பரிந்துரை


மாவட்டத்தில், ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, அரசு தடை விதித்திருந்தது. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள ஏரிகளில் இருந்து, விவசாயம், மண்பாண்ட தொழில் பயன்பாட்டுப் பணிக்கு தேவையான வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை தேவைப்படும் நபர்கள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீர் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டும் தான் வண்டல் மண் எடுக்க வேண்டும்.

நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வாயிலாக, வரைபடத்தில் அளவீடுகள் குறியீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே, வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும். ஒரே இடத்தில் வெட்டி எடுக்காமல், பரவலாக எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகாவில் நான்கு ஏரிகள், வண்டலுார் தாலுகாவில் ஒரு ஏரி, திருக்கழுக்குன்றம் பகுதியில் எட்டு ஏரி, திருப்போரூர் தாலுகாவில் இரண்டு ஏரிகள், செய்யூர் தாலுகாவில் 55 ஏரிகள் என, மொத்தம் 70 ஏரிகளில், விவசாய பணிக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என, மாவட்ட அரசிதழில், கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நிபந்தனைகள்


வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, கனிம விதிக்குட்பட்டு அனுமதி பெற்று, ஏரிகளில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய அடங்கல் சான்று பெற்று, வேளாண் அலுவலரிடம் வண்டல் மண் எடுக்க சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இலவசமாக விவசாய பணிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் அனுமதி, 30 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்டுள்ள ஏரிகள்


செங்கல்பட்டு தாலுகா: ஒழலுார், புதுப்பாக்கம், கடம்பூர், களிவந்தப்பட்டு, கருநிலம்.
திருப்போரூர் தாலுகா: வெங்கலேரி, தண்டலம் பெரிய ஏரி.
திருக்கழுக்குன்றம் தாலுகா: ஆயப்பாக்கம், குன்னத்துார், மணமை, குன்னவாக்கம் சித்தேரி, குன்னவாக்கம் பெரிய ஏரி, பெரும்பேடு, நென்மேலி சித்தேரி, நென்மேலி பெரிய ஏரி.
செய்யூர் தாலுகா: நெல்வாய்பாளையம், சத்யமங்கலம், பரமன்கேணி, சீக்கினாங்குப்பம், தட்டாம்பட்டு, நெற்குணப்பட்டு, வேட்டைக்காரன்குப்பம் ஏரி, பாக்கூர், நெடுமரம், வீரபோகம், கீழ்மருவத்துார்.இரும்புலி, பேரம்பாக்கம், தண்டலம், முகுந்தகிரி, பெருக்கரணை, பருக்கல், பழவூர், இந்தலுார், பூங்குணம், கொளத்துார், அறப்பேடு, சின்னகயப்பாக்கம், கோட்டை பூஞ்சை. பெரியகயப்பாக்கம், நெற்குன்றம், புலியணை, பெரியகளக்காடி, சிறுமயிலுார், சிறுநகர், வெண்மேலகரம், அகரம், ஆண்டார்குப்பம், அரசூர், விளாம்பட்டு, புதுப்பட்டு, அகரம், பச்சையம்பாக்கம்.சீவடி, புன்னமை, நீலமங்கலம், லத்துார், கல்குளம், தொண்டமநல்லுார், பாலுார், பெரியவெளிகாடு, கடுகுப்பட்டு பெரிய ஏரி, கடுகுப்பட்டு சித்தேரி, இரணியசித்தி, ஆக்கினாம்பட்டு, விளங்காடு, ஒத்திவிளாகம், சூணாம்பேடு, பனையடிவாக்கம், கொளத்துார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us