/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஓ.எம்.ஆர்., குறுக்கே நீர்வழி சிறுபாலங்கள் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கலந்தாலோசனை ஓ.எம்.ஆர்., குறுக்கே நீர்வழி சிறுபாலங்கள் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கலந்தாலோசனை
ஓ.எம்.ஆர்., குறுக்கே நீர்வழி சிறுபாலங்கள் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கலந்தாலோசனை
ஓ.எம்.ஆர்., குறுக்கே நீர்வழி சிறுபாலங்கள் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கலந்தாலோசனை
ஓ.எம்.ஆர்., குறுக்கே நீர்வழி சிறுபாலங்கள் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கலந்தாலோசனை
ADDED : ஜூன் 01, 2025 12:34 AM

சென்னை, சென்னையில் அதிக கனமழையின் போது, வேளச்சேரி, கிண்டி, தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். இங்குள்ள மழை வெள்ளம், பகிங்ஹாம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு வழியாக கடலில் சேர்கிறது.
தரமணி, வேளச்சேரியின் ஒரு பகுதி மற்றும் ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் வெள்ளம், ஓ.எம்.ஆரை கடந்து, பகிங்ஹாம் கால்வாயில் சேர்கிறது.
இதற்காக, இந்திரா நகர், திருவான்மியூர் ரயில் நிலையம் அருகில், டைடல் பார்க், சி.எஸ்.ஐ.ஆர்., சாலை, பெருங்குடி ஆகிய பகுதிகளில், ஓ.எம்.ஆர்., குறுக்கே, 2008ம் ஆண்டு நீர்வழி சிறுபாலங்கள் கட்டப்பட்டன.
இந்த நீர்வழி பாலங்களில், போதிய பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வெள்ள நீரோட்டத்திற்கு ஏற்ப அகலம் இல்லாததால், கனமழையின்போது ஓ.எம்.ஆரில் வெள்ளம் தேங்கி, வாகன போக்குவரத்து தடைபட்டது.
டைடல் பார்க் சந்திப்பில், 'யூ' வடிவ மேம்பாலத்தின் பில்லர், நீர்வழி சிறு பாலம் மீது அமைக்கப்பட்டது. இதனால், மாற்று வழியில் நீர்வழி மேம்பாலத்தை அமைக்க வேண்டி உள்ளது.
இந்த சிறு பாலங்களை மேம்படுத்தவும், கூடுதலாக புதிய நீர்வழி சிறுபாலங்கள் தேவைப்படும் இடங்கள் மற்றும் அதற்காக நிதி ஒதுக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து எடுத்து வருகிறது.
இதற்காக, நேற்று கள ஆய்வு நடந்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், தெற்கு வட்டார இணை கமிஷனர் அமித் மற்றும் குடிநீர் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, இந்திரா நகர், டைடல் பார்க் பகுதியில் உள்ள நீர்வழி பாலங்களை அகலப்படுத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.
நீர்வழி சிறுபாலம் கட்ட இடையூறாக உள்ள குடிநீர், கழிவுநீர் குழாய், மின் கேபிள் மற்றும் தொலை தொடர்பு கேபிள்களை இடம் மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசித்தனர்.
இந்திரா நகர் முதல் எஸ்.ஆர்.பி., டூல்ஸ் வரை, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைவதால், அதன் வடிவமைப்பை கருத்தில் கொண்டு நீர்வழி சிறுபாலங்கள் கட்டுவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதற்கான, பணிகள் விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.