/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல் புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்
புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்
புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்
புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்
ADDED : ஜூன் 30, 2025 11:08 PM

செங்கல்பட்டு :செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே 56 கி.மீ., துாரத்தில் உள்ள 11 ரயில் நிலையங்களை, ரயில்வே துறை புறநகராக அங்கீகரிக்காததால், 'ரிட்டர்ன்' டிக்கெட், கூடுதல் ரயில் சேவை, தானியங்கி சிக்னல், வாகன நிறுத்தங்கள் போன்ற எந்தவித சேவைகளும் கிடைக்காமல் உள்ளதாக ரயில் பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.
தெற்கு ரயில்வே, சென்னை மண்டலம் கீழ் கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், ஆவடி, வேளச்சேரி அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், வேளச்சேரி, ஆவடி போன்ற இடங்களுக்கு சில நிமிடங்கள் இடைவெளியில் மின்சார ரயில் சேவை உள்ளது. தவிர, நாள் முழுதும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தும் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான பகுதிகளுக்கு, போதிய ரயில் சேவை இருப்பதில்லை. இயக்கப்படும் மின்சார ரயில்கள் எண்ணிக்கையும், குறைவாகவே உள்ளன.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு சென்று பணிபுரிவோர் மற்றும் சொந்த வேலை காரணமாக, தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 56 கி.மீ., துாரத்தில், 11 ரயில் நிலையங்களின் வருமானம், ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்து வருகிறது.
அப்படியிருந்தும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான 56 கி.மீ., துாரத்தை சென்னையின் புறநகராக ரயில்வே அங்கீகரிக்காதது, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும், பயணியர் சேவைக்கும் பிரச்னையாகவே நீடிக்கிறது.
செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி போன்ற வழித்தடங்களை சென்னையின் புறநகர் பகுதியாக ரயில்வே நிர்வாகம் அங்கீகரித்து, அங்கு சேவைகளை மேற்கொள்கிறது.
ஆனால், அதிக பயணியரை கையாளும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான பகுதியை புறநகராக அங்கீகரிக்காததால், 'ரிட்டர்ன் டிக்கெட்' கூட எடுக்க முடிவதில்லை என, பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் - சென்னை ரயில் பயணியர் சங்க செயலர் கே.ரங்கநாதன் கூறியதாவது:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான 11 ரயில் நிலையங்கள் வாயிலாக, கோடிக்கணக்கில் ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
இப்பகுதியை, புறநகர் வகைப்பாட்டின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய இணை அமைச்சர் சோமண்ணாவிடமும் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு, காஞ்சிபுரம் பகுதியை புறநகராக அறிவிப்பது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தென்மண்டல மேலாளரையும் சந்திக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.