/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/போதை மாத்திரை கடத்தல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைபோதை மாத்திரை கடத்தல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
போதை மாத்திரை கடத்தல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
போதை மாத்திரை கடத்தல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
போதை மாத்திரை கடத்தல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஜன 05, 2024 11:17 PM
சென்னை:சென்னை விமான நிலைய சுங்கத்துறையில், வெளிநாடுகளுக்கு செல்லும் தபால் உள்ளிட்ட பார்சல்களை மதிப்பீடு செய்யும் பிரிவு உள்ளது. இங்கு, பதிவு செய்யப்படாத 23 பார்சல்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில், பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக, 2020 செப்., 4ல், சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பார்சலை, சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த சையத் சிராஜுதீன் பாட்ஷா என்பவர் பெயரில், வெளிநாடுகளுக்கு பலரின் முகவரியில் அனுப்பப்பட இருந்த மாத்திரைகள் என்பது தெரியவந்தது.
தடையில்லா சான்றுகளின்றி, பல்வேறு நாடுகளுக்கு 211 பார்சல்களில், சையத் சிராஜுதீன் பாட்ஷா, இந்த மாத்திரைகளை அனுப்பியதும், இந்த மாத்திரைகள் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி, கட்டுப்படுத்தப்பட்ட பொருள் பட்டியலில் இடம்பெற்றவை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சையத் சிராஜுதீனை பாட்ஷாவை கைது செய்து, அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. சுங்கத்துறை சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் என்.பி.குமார், ஏ.செல்லத்துரை ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2.30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.