Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று படுகையில் உயர்மட்ட பாலம் அமைப்பது எப்போது?

வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று படுகையில் உயர்மட்ட பாலம் அமைப்பது எப்போது?

வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று படுகையில் உயர்மட்ட பாலம் அமைப்பது எப்போது?

வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று படுகையில் உயர்மட்ட பாலம் அமைப்பது எப்போது?

ADDED : ஜூன் 06, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை - திருச்சி, மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைகள்; சென்னை - மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகள் உள்ளிட்டவை முக்கிய வழித்தடங்களாக உள்ளன.

மாவட்டத்தின் கடலோர முக்கிய பகுதிகள், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார் ஆகிய பகுதிகளில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரம் சுற்றுலா பகுதி, திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆன்மிக பகுதிகள் உள்ளிட்ட இடங்களை, மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதி திருச்சி சாலையுடன், திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் வழித்தடம் இணைக்கிறது.

பிற மாவட்ட பயணியர், இத்தடம் வழியே மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகின்றனர். திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் பகுதியினர், அத்தியாவசிய தேவைகளுக்கு, பிற இடங்கள் சென்று திரும்புகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகரிக்கிறது.

இத்தடத்தில் குறுக்கிடும் வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றுபடுகையில், தற்கால போக்குவரத்து சூழலுக்கேற்ப உயர்மட்ட பாலம் இன்றியமையாதது.

இங்குள்ள 700 மீ., தரைப்பாலம், போக்குவரத்தை தாங்க இயலாமல் பலமிழந்து வருகிறது. இதில், எதிரெதிர் திசையில் வாகனங்கள் கடக்க நேர்ந்தால், ஒதுங்கி வழிவிட இயலாமல் குறுகியதாகவும் உள்ளது.

கடந்த 2021ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், முழுப்பாலமும் மூழ்கி, 100 மீ., நீள பாலம் துண்டிக்கப்பட்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

பின்னர் பழைய வீராண திட்டை கான்கிரீட் குழாய்கள் பொருத்தி பாலம் சீரமைக்கப்பட்டது. 2022ல், 30 மீ., நீள பாலம் கீழிறங்கியதால், அங்கு மட்டும் கான்கிரீட் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

பாலம் வெள்ளத்தில் மூழ்குவது, துண்டிக்கப்படுவது என, போக்குவரத்து முடங்கி, 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதியினர், சில மாதங்கள் வரை, 10 - 15 கி.மீ. சுற்றிச் சென்று அவதிக்குள்ளாகின்றனர்.

மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் முக்கிய தடமாக இருந்தும், நீண்டகாலமாக ஒருவழிப்பாதையாகவும், சீரழிந்தும் இருந்தது.

இத்தடம் வழியே, மாமல்லபுரம் - கருங்குழி இடையேயான தொலைவு, 38 கி.மீ., சாலை சீரழிவால், செங்கல்பட்டு வழியே, 12 கி.மீ., கூடுதலாக சுற்றிச் சென்ற நிலை இருந்தது.

இத்தடத்தின் முக்கியத்துவம் கருதி, சாலையை விரிவுபடுத்துவது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 10.5 மீ., அகல சாலையாக விரிவாக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை, சாலையை மட்டும் மேம்படுத்தி, தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்க முயற்சிக்கவில்லை.

சாலை மேம்பாட்டைத் தொடர்ந்து, சுற்றுலா, மாவட்ட பகுதி போக்குவரத்து என, இத்தடத்தில் அதிகரித்துள்ளது.

இச்சூழலில், முக்கியத்துவம் மற்றும் அவசியம் கருதி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் மற்றும் இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us