/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்துகள் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்துகள் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்துகள் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்துகள் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்துகள் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
ADDED : ஜூலை 23, 2024 01:33 AM

மறைமலை நகர், செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், தடம் எண் '82சி' அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த தடத்தில்,சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தெள்ளிமேடு,ஆப்பூர், சேந்தமங்கலம், ஒரகடம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை சிங்கபெருமாள் கோவிலில், இந்த பேருந்தில் ஏறிய சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவியர், சேந்தமங்கலம் கிராமத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளனர்.
பேருந்து நடத்துனர், சேந்தமங்கலம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்தில், கல்லுாரி மாணவியர் மொபைல் போன் வாயிலாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சேந்தமங்கலம் நிறுத்தத்தில், 50க்கும் மேற்பட்டோர் பேருந்தை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர்.
மேலும், அடுத்தடுத்து வந்த மூன்று அரசு பேருந்துகளையும் சிறை பிடித்தனர்.
30 நிமிடங்களுக்கு மேலாக, பேருந்தை நிறுத்த வேண்டும்; ஏன் நிறுத்தாமல் செல்கின்றீர்கள் என, பேருந்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பினர்.
தகவலறிந்து வந்த பாலுார் போலீசார், கிராம மக்களை சமாதானம் செய்து, அரசு பேருந்துகளைஅனுப்பி வைத்தனர்.
சேந்தமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது:
சேந்தமங்கலம் நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோக்களிலும், முன் பின் தெரியாதோரிடம் லிப்ட் கேட்டும் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, அரசு பேருந்துகள் சேந்தமங்கலம் நிறுத்தத்தில் நின்று செல்ல, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
இச்சம்பவத்தையடுத்து, காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள், சேந்தமங்கலம், ஆப்பூர் உள்ளிட்ட நிறுத்தங்களில், பேருந்துகள் முறையாக நின்று செல்கின்றனவா என, ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, காஞ்சிபுரம் மண்டல போக்கு வரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், 15 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்தவில்லை எனில், 149 என்ற இலவச தொடர்பு எண்ணில் நேரடியாக புகார் அளிக்கலாம். இந்த எண்கள் அனைத்து பேருந்துகளிலும் எழுதப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.