/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை
வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை
வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை
வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை
ADDED : ஜூலை 05, 2024 12:45 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, அமணம்பாக்கம் - திருப்போரூர் கூட்டு சாலை 3 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலை வழியாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இந்த சாலையை பயன்படுத்தி, திருக்கழுக்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், அமணம்பாக்கம் சுடுகாடு பகுதியில் இருந்து, திருப்போரூர் சாலை இணைப்பு வரை, 2 கி.மீ., தொலைவுக்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலை, 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
அதனால், வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராவதால், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு பணி முடித்து அச்ச உணர்வுடன் செல்லும் நிலை உள்ளது.
கடந்த வாரம், இந்த சாலையில் வேலை முடித்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை தாக்கி, மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சாலையின் ஒருபுறம் காப்புக் காடுகள் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளது.
பொது மக்கள் சிரமத்தை உணர்ந்து, அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் சாலை அமைக்க, சென்னையில் உள்ள முதன்மை தலைமை வன பாதுகாலவருக்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், இந்த பகுதிகளை ஆய்வு செய்து விசாரணைக்கு பின் அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.