/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பயனின்றி பாழான கால்நடை குடிநீர் தொட்டிகள் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு பயனின்றி பாழான கால்நடை குடிநீர் தொட்டிகள் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
பயனின்றி பாழான கால்நடை குடிநீர் தொட்டிகள் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
பயனின்றி பாழான கால்நடை குடிநீர் தொட்டிகள் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
பயனின்றி பாழான கால்நடை குடிநீர் தொட்டிகள் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 01, 2024 11:58 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், லத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், கோடை காலங்களில் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் வறண்டு விடுவதால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன.
இவற்றின் தாகத்தை தணிக்க, தமிழக அரசு சார்பில், 2018ல் குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தலா 20,000 மதிப்பீட்டில், ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர் தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டன.
இதில், சில ஊராட்சிகளில் மட்டுமே முறையாக பைப் லைன் அமைத்து, குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பராமரிக்கப்படுகிறது.
பெரும்பாலான ஊராட்சிகளில் தண்ணீர் தொட்டிகள் வறண்டும், தண்ணீர் செல்லும் பைப் லைன்கள் உடைக்கப்பட்டும் உள்ளன.
பல ஊராட்சிகளில், தரமில்லாத கட்டுமானம் காரணமாக, தொட்டிகள் உடைந்து தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், தினமும் தண்ணீர் விட்டு பராமரிக்க, முறையாக ஆட்களும் இல்லை.
இதனால், அரசு நிதி வீணாக்கப்படுவதோடு, கால்நடைகளின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்ற நல்ல திட்டமும் வீணாகி வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தண்ணீர் தேடி கால்நடைகள் சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்துடன் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த மாவட்டத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. கோடை காலங்களில், இவற்றிற்கு தண்ணீர் என்பது பெரும் சவாலாக உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பாழடைந்து கிடக்கும் இந்த குடிநீர் தொட்டிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.