ADDED : ஜூலை 28, 2024 06:55 AM

பெருங்களத்துார் : பெருங்களத்துார் மேம்பாலத் திட்டத்தில், தாம்பரம் - வண்டலுார் மார்க்கமான பாதை பணிகள் முடிந்து திறப்புக்கு தயாராகி உள்ளது.
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், 234 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலை- மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து 2019ல் துவக்கின.
இத்திட்டத்தில், முதல் கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார்-- தாம்பரம் மார்க்கமான பாதை, 2022ல் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, புது பெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதையும் திறக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பணிகள் துவங்கின.
தேர்தல் நேரத்தில் மந்தமாக நடந்து வந்த பணிகள், தற்போது வேகமெடுத்து இரவு, பகலாக நடந்து முடிந்துள்ளன. மேம்பாலத்தின் மேல் மார்க் செய்தல் பணி மட்டுமே எஞ்சியுள்ளது.
ஆக., முதல் வாரத்திற்குள் இப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதை திறக்கப்பட்டபின், பெருங்களத்துாரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் அடுத்த கட்டமாக, நெடுங்குன்றம் மார்க்கமான பாதை மட்டுமே உள்ளது.
இப்பாதை அமையஉள்ள இடத்தின் பெரும் பகுதி, வனத்துறைக்கு சொந்தமானவை. இதற்காக, அனுமதி கேட்டு, மத்திய வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதேபோல், பெருங்களத்துார் வழியாக ராஜகீழ்ப்பாக்கத்தை இணைக்கும் தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை திட்டத்திற்கும் நிலம் கேட்டு, மத்திய வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஓரிரு மாதங்களில், மத்திய வனத்துறை அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.