/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை; ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை; ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல்
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை; ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல்
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை; ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல்
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை; ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல்
ADDED : ஜூலை 07, 2024 10:57 PM

கூடுவாஞ்சேரி : தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
வார விடுமுறை நாளான நேற்று, விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு, அதிக அளவிலான பயணியர், கார் மற்றும் பேருந்தில் பயணித்தனர்.
தனியார் மற்றும் ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோரும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து பேருந்துகள் வாயிலாக, வார விடுமுறையைக் கழிக்க, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, விடுமுறை நாட்களில் மட்டும், 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதனால், ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் அதிகரிக்கிறது. மேலும், போக்குவரத்தை சீரமைக்க போதிய அளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், வாகன ஓட்டிகள் நெரிசலில் தத்தளிக்கின்றனர்.
அது மட்டுமின்றி, வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள சிக்னல்கள் இயங்கவில்லை.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், தாறுமாறாக செல்கின்றன. அதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியதாவது:
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து உள்ளன.
ஆனால், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு போதுமான போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தப்படுவதில்லை.
அது மட்டுமின்றி, தானியங்கி சிக்னல்களும் பல இடங்களில் பழுதாகி, பயனின்றி உள்ளன. எனவே, கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்கவும், பழுதான சிக்னல்களை சீரமைக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.