Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தனியார் நிறுவனத்தின் உதவியுடன் திருநீர்மலை ஏரியை சுத்தப்படுத்த திட்டம்

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் திருநீர்மலை ஏரியை சுத்தப்படுத்த திட்டம்

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் திருநீர்மலை ஏரியை சுத்தப்படுத்த திட்டம்

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் திருநீர்மலை ஏரியை சுத்தப்படுத்த திட்டம்

ADDED : ஜூன் 20, 2024 10:47 PM


Google News
திருநீர்மலை:தாம்பரம் அடுத்த திருநீர்மலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 194.01 ஏக்கர் பரப்பு ஏரி உள்ளது. சென்னை புறவழிச்சாலை அமைக்கும் போது, இந்த ஏரி, மேற்கு - கிழக்கு என, இரண்டாக பிரிந்தது.

சுற்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் அதிகரித்ததால், 146.94 ஏக்கராக ஏரி சுருங்கி விட்டது. மற்றொரு புறம், ஏரியை முறையாக பராமரிக்காததால், மெப்ஸ் ஏற்றுமதி வளாக கழிவு நீர், பல ஆண்டுகளாக கலந்து வருகிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து, சுற்றுவட்டார நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் போர்வெல் தண்ணீர் நுரையாகவும், மாசடைந்தும் வந்தது. இதையடுத்து அப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

தற்போது, ஏரியில் ஆகாய தாமரை, கரையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதராக மாறிவிட்டன. இவ்வளவு பெரிய ஏரி, நாசமடைந்து வருவதை தடுத்து, துார்வாரி, மழைநீர் தேக்கமாக மாற்றி பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.

மேலும், ஏரியில் படகு தளம் அமைத்து, சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதையடுத்து 2024 மே மாதம், 'எக்ஸ்னோரா' மற்றும் திருநீர்மலை மக்கள் இணைந்து, ஏரியை சுத்தப்படுத்தினர்.

தொடர்ந்து, ஏரியை சுத்தப்படுத்த, இ.எப்.ஐ., என்ற தனியார் நிறுவனத்திற்கு, பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்நிறுவனம், ஏரியில் உள்ள ஆகாய தாமரையை அகற்றி சுத்தப்படுத்துதல், கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுதல், கரையில் மண்ணை கொட்டி பலப்படுத்துதல், சிறிய தீவு அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரிகளில், ஏற்கனவே, தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏரியில் உள்ள தண்ணீரை அகற்றி, முழுமையாக துார் வாரி, ஆழப்படுத்தி, கலங்கல், மதகு போன்ற பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, அதன் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்க முடியும்.

சமூக ஆர்வலர்கள்.

தண்ணீரும் 'அவுட்'


புறநகரில், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, திருநீர்மலை, பல்லாவரம், வீரராகவன், தாம்பரம் புத்தேரி, சேலையூர், ராஜகீழ்ப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் கழிவு நீர் கலந்து, தண்ணீர் முற்றிலுமாக நிறம் மாறி நாசமடைந்து விட்டது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. அப்படியிருந்தும், மாவட்ட நிர்வாகம், கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துவதில் முனைப்பு காட்டவில்லை. திருநீர்மலை ஏரியை பொறுத்தவரை, தற்போதுள்ள கழிவுநீர் கலந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு, மழைநீரை தேக்க வேண்டும். குறிப்பாக, 'மெப்ஸ்' ஏற்றுமதி வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சுத்திகரிப்பு செய்து கலக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us