/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போதிய வெளியூர் பஸ்கள் இல்லை கிளாம்பாக்கத்தில் இரவில் மறியல் போதிய வெளியூர் பஸ்கள் இல்லை கிளாம்பாக்கத்தில் இரவில் மறியல்
போதிய வெளியூர் பஸ்கள் இல்லை கிளாம்பாக்கத்தில் இரவில் மறியல்
போதிய வெளியூர் பஸ்கள் இல்லை கிளாம்பாக்கத்தில் இரவில் மறியல்
போதிய வெளியூர் பஸ்கள் இல்லை கிளாம்பாக்கத்தில் இரவில் மறியல்
ADDED : ஜூலை 22, 2024 01:58 AM

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, வார விடுமுறை நாளான நேற்று முன்தினம், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், சொந்த ஊர் செல்ல திரண்டனர்.
ஆனால், பேருந்து முனையத்தில் கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு, இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணியர், திருவண்ணாமலைக்கு புறப்பட்ட பேருந்தை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பயணியருடன் பேச்சு நடத்தினர்.
அப்போது, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணியர் கூறியதாவது:
வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக, அரசு அறிவித்திருந்தது. ஆனால் இங்கு, சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. நீண்ட நேரமாக இங்கு காத்திருக்கிறோம்.
தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்ல, இரவு 9:00 மணிக்கு மேல் ஒரு பேருந்து கூட இயக்கப்படவில்லை. இதனால் சிலர், அதிக கட்டணம் செலுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகளில் சென்றனர்.
அரசு தனி கவனம் செலுத்தி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.