/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஒப்புதல் வழங்குவதில் அலட்சியம்; 2 ஆண்டாக முடங்கிய திட்டப்பணிகள் ஒப்புதல் வழங்குவதில் அலட்சியம்; 2 ஆண்டாக முடங்கிய திட்டப்பணிகள்
ஒப்புதல் வழங்குவதில் அலட்சியம்; 2 ஆண்டாக முடங்கிய திட்டப்பணிகள்
ஒப்புதல் வழங்குவதில் அலட்சியம்; 2 ஆண்டாக முடங்கிய திட்டப்பணிகள்
ஒப்புதல் வழங்குவதில் அலட்சியம்; 2 ஆண்டாக முடங்கிய திட்டப்பணிகள்
ADDED : ஜூன் 10, 2024 12:58 AM
தாம்பரம் : வனம் மற்றும் மூலிகை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் அலட்சியம் காட்டுவதால், மாநில வன ஆராய்ச்சி உள்ளிட்ட ஐந்து மையங்களில், புதிய ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள், இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
வண்டலுாரை அடுத்த கொளப்பாக்கத்தில், வன ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.
இதன் கட்டுப்பாட்டில் சென்னை, கோயம்புத்துார், மதுரை, திருச்சி, தர்மபுரி என, ஐந்து கிளை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், வனம் சார்ந்த மரங்கள், மூலிகைச் செடிகள் குறித்த ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மையங்களுக்கு, பல்லுயிர் பரவல் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், ஜப்பான் உதவி 50 லட்சம் ரூபாய், மாநில அரசு நிதி நான்கு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
அந்த நிதியை பயன்படுத்தி பராமரிப்பு, வனம் மற்றும் மூலிகை சார்ந்த புதிய ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளுக்கு, ஆராய்ச்சி பிரிவின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஆனால், இரண்டு ஆண்டுகளாக உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்காததால், ஐந்து மையங்களிலும் வனத்துறையின் புதிய ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகள், முடங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியும், திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் அப்படியே உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, இப்பிரச்னையில், வனத்துறை அமைச்சர் மற்றும் துறை செயலர் தலையிட்டு, முறையான ஒப்புதல் வழங்கி, வனம் மற்றும் மூலிகை சம்பந்தமான புதிய ஆராய்ச்சி உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.