Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள மாமல்லை ஸ்தலசயனர் கோவில் தேர்

திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள மாமல்லை ஸ்தலசயனர் கோவில் தேர்

திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள மாமல்லை ஸ்தலசயனர் கோவில் தேர்

திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள மாமல்லை ஸ்தலசயனர் கோவில் தேர்

ADDED : ஜூன் 21, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஸ்தலசயனர் சித்திரை பிரம்மோற்சவ விழாவிலும், பூதத்தாழ்வார் அவதார ஜெயந்தி உற்சவ விழாவிலும், திருத் தேரில் உலா செல்வார்.

சென்னை பக்தர் வசந்த் ஷேன்பாக் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன், நன்கொடையாக, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், கமல வடிவ மரத்தேர் அளித்தார்.

இதற்கு முந்தைய தேர், கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. புதிய தேர், கோவிலின் முந்தைய தேரடியை ஒட்டி, கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி, பாதுகாப்பு கூரையும் அமைக்கப்பட்டது.

கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கடந்த பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருப்பணிகள் உபயதாரர், ஆகம, வாஸ்துஆகியவற்றின்படி, தேர் நிறுத்துமிடம் குறித்து பரிசீலித்து, கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, சித்திரைபிரம்மோற்சவத்தில், கடந்த ஏப்., 23ம் தேதி நடந்த திருத்தேர் உற்சவத்தைத் தொடர்ந்து, தேர் பாதுகாப்பு கூரையில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டது.

வாஸ்து பரிந்துரையின்படி, பாதுகாப்பு கூரையை ஒட்டி, கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்தும், பாதுகாப்பு கூரையை, தேருக்கு பாதுகாப்பாக மாற்றியமைக்காமல் தாமதப்படுத்தப்படுகிறது. அதனால், கோடை வெயிலிலும், மழையிலும், சூறாவளி காற்றிலும் தேர் பாதிக்கப்படுகிறது.

இப்பகுதி பேருந்து நிலையம் என்பதால், இங்கு நிறுத்தப்படும் அரசுப் பேருந்து, கார் ஆகியவை பின்னோக்கி செல்லும் நிலையில், அவை தேரில் மோதி, தேர் சேதமடையும் அபாயம் உள்ளது.

எனவே, தேரின் பாதுகாப்பு கருதி, தேருக்கு பாதுகாப்பாக கூரையை விரைந்து மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us