/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை மதுராந்தகம் மருத்துவமனையில் தவிப்பு டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை மதுராந்தகம் மருத்துவமனையில் தவிப்பு
டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை மதுராந்தகம் மருத்துவமனையில் தவிப்பு
டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை மதுராந்தகம் மருத்துவமனையில் தவிப்பு
டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை மதுராந்தகம் மருத்துவமனையில் தவிப்பு
ADDED : ஜூன் 19, 2024 12:18 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் மருத்துவமனையை சித்தாமூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் என, 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் 110 படுக்கை வசதிகள் உள்ளன. உள்நோயாளிகள் பிரிவில், பெண்களுக்கு 24 படுக்கைகளும், ஆண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 32 படுக்கைகளும் உள்ளன.
மாதந்தோறும், 45 முதல் 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன.
மருத்துவமனையில் பொது நலம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, முட நீக்கியல் மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.
அதேபோல், மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய, போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
மொத்தம் உள்ள 32 மருத்துவ பணியாளர்களில், 18 காலி பணியிடங்கள் உள்ளன. மீதமுள்ள மருத்துவ பணியாளர்களில், 3 பேர் வரை தினசரி விடுப்பில் செல்கின்றனர்.
இதனால், 10க்கும் குறைவான மருத்துவ பணியாளர்களை கொண்டு, சரிவர நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை நேரங்களில் மருத்துவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், மருத்துவமனை வளாகத்தில் துாய்மை பணிகளை விரைந்து செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.