Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளிகளில் ஆதார் சிறப்பு மையம் துவக்கம்

பள்ளிகளில் ஆதார் சிறப்பு மையம் துவக்கம்

பள்ளிகளில் ஆதார் சிறப்பு மையம் துவக்கம்

பள்ளிகளில் ஆதார் சிறப்பு மையம் துவக்கம்

ADDED : ஜூன் 10, 2024 11:07 PM


Google News
செங்கல்பட்டு : மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், ஆதார் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், நேற்று துவங்கியது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, கலெக்டர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

செங்கல்பட்டு நகராட்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில், இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.

அதன்பின், பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, உயர் கல்வி படிக்க, தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பள்ளி மாணவர்களும், முதல் மதிப்பெண் பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதாக உறுதி அளித்துள்ளனர். அவர்களுக்கு உயர் கல்வி படிக்க, 50,000 ரூபாய் பெறுவதற்கு, பொதுத்தேர்வில் முதலிடம் பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

ஆசிரியர்களும், மாணவர்களுக்கு சிறப்பாக பாடங்கள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.

முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதன்பின், பள்ளியில் ஆய்வு செய்து, பழுதாகி கிடந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இதே பள்ளியில், ஆதார்சேவை மைய சிறப்பு முகாமை, கலெக்டர் துவக்கி வைத்தார்.

மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 1,491 பள்ளிகளில், ஆதார் சேவை மையம் செயல்படும்.

இந்த மையத்தில், ஆதார் அட்டையில் புகைப்படம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் ஆகியவற்றை செய்து பயன்பெறலாம் என, கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us