Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தண்ணீரின்றி கருகும் தோட்ட பயிர்கள் மின்மாற்றி பழுதால் விவசாயிகள் வேதனை

தண்ணீரின்றி கருகும் தோட்ட பயிர்கள் மின்மாற்றி பழுதால் விவசாயிகள் வேதனை

தண்ணீரின்றி கருகும் தோட்ட பயிர்கள் மின்மாற்றி பழுதால் விவசாயிகள் வேதனை

தண்ணீரின்றி கருகும் தோட்ட பயிர்கள் மின்மாற்றி பழுதால் விவசாயிகள் வேதனை

ADDED : ஜூலை 26, 2024 02:39 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், தின்னலுார் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில், விவசாயமே முக்கிய தொழில். மேட்டுப்பாளையம் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் உள்ளனர்.

இங்கு, கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் இருந்து, மின்மோட்டார் வாயிலாக தண்ணீர் பாய்ச்சி, கரும்பு, நெல், உளுந்து, மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மின்மாற்றி சேதமடைந்தது. அதனால், மின்மாற்றியை சரி செய்து தரக்கோரி, விவசாயிகள் ஒரத்தி துணைமின் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதி, மின் மாற்றியை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர்கள், சேதமான மின் மாற்றியை கழற்றி எடுத்துச் சென்றனர்.

அதன்பின், 25 நாட்களைக் கடந்தும், தற்போது வரை மின்மாற்றி சீரமைப்பு செய்யப்படவில்லை. அதனால், 500 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், பயிர்கள் வெயிலில் கருகி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயி செல்வராஜ், 60, என்பவர் கூறியதாவது:

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, மின் மாற்றி இல்லாமல், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. தற்காலிகமாக, வேறொரு மின்மாற்றில் இருந்து, வீட்டு மின் இணைப்புகளுக்கு மட்டும், இணைப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

அதிலும், குறைந்த அழுத்தத்தில் மட்டுமே மின்சாரம் வினியோகிக்கப்படுவதால், மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு வீணாகின்றன.

அதுமட்டுமின்றி, எள், உளுந்து, வேர்க்கடலை போன்ற பயிர்களுக்கு தோட்டக்கலை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், வெயிலில் கருகி வருகின்றன.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால், அவர்கள் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். மின்மாற்றியை பழுது நீக்கி, உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us