/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இரும்புலிச்சோி பாலாற்றில் அபாய பயணம் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? இரும்புலிச்சோி பாலாற்றில் அபாய பயணம் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
இரும்புலிச்சோி பாலாற்றில் அபாய பயணம் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
இரும்புலிச்சோி பாலாற்றில் அபாய பயணம் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
இரும்புலிச்சோி பாலாற்றில் அபாய பயணம் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 25, 2024 06:35 AM

நெரும்பூர் : திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி - எடையாத்துார் ஆகிய பகுதிகளில், பாலாறு கடக்கிறது. எடையாத்துார் பகுதியில், ஆறு இரண்டாக பிரிந்து, இரும்புலிச்சேரி வரை தனித்தனியே கடந்து, மீண்டும் கூடுகிறது. இரண்டு பகுதிகளும், ஆறுகள் இடையே தனித்தீவாக உள்ளன.
அப்பகுதியை, நெரும்பூர் - வாயலுார் சாலை வழியே, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுடன் இணைக்க, இரும்புலிச்சேரி பகுதி பாலாற்றில், 30 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அது, 2015 வெள்ளப்பெருக்கில் இடிந்து, தீவு பகுதி துண்டிக்கப்பட்டது.
இப்பகுதி போக்குவரத்து அவசியம் கருதி, பழைய பாலத்திலிருந்து, 1 கி.மீ., தெற்கில், பழைய வீராண திட்ட கான்கிரீட் குழாய்கள் வைத்து, தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், வெள்ளப்பெருக்கில் இப்பாலம் சேதமடைந்து, அப்பகுதியினர் சில மாதங்கள், எடையாத்துார் - பாண்டூர் பாலம் வழியே, 5 கி.மீ., சுற்றிச் செல்வர். பாலம் சீரமைக்கப்பட்டதும், வழக்கமான பாதையில் செல்வர்.
கடந்த ஆண்டு அக்., - டிச.,ல், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பாலத்தில் மண் அரிப்பு, அபாய பள்ளம் ஏற்பட்டு, பாதை உருக்குலைந்தது.
கடந்த அக்.,ல், 'பொக்லைன்' ஆற்றில் சரிந்து, பல மணி நேரம் போராடி மீட்கப்பட்டது. லாரியும் அபாய பள்ளத்தில் சிக்கியது.
மழை ஓய்ந்து, வெள்ளப்பெருக்கு நின்ற பின், பால சேதத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பர். ஆனால், தற்போது ஆறு மாதங்கள் கடந்தும் சீரமைக்கப்படவில்லை.
அப்பகுதியினர், எடையாத்துார் வழியே சில மாதங்கள் சுற்றிச்சென்றனர். தற்போது கால விரயம், எரிபொருள் விரயம் கருதி, தற்போது ஆற்றுக்குள் வாகனம் ஓட்டி கடக்கின்றனர்.
கரடுமுரடான பள்ளம், மேடு மணற்பரப்பில் சரிந்து விழும் அபாயத்துடன் செல்கின்றனர். இரவில் அவசிய சூழலில், எடையாத்துாரை சுற்றி செல்கின்றனர். போக்குவரத்து அவசியம் கருதி, தற்காலிக பால சேதத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.