/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஏரியில் எரிக்கப்படும் குப்பை நச்சுப்புகை பரவலால் பாதிப்பு ஏரியில் எரிக்கப்படும் குப்பை நச்சுப்புகை பரவலால் பாதிப்பு
ஏரியில் எரிக்கப்படும் குப்பை நச்சுப்புகை பரவலால் பாதிப்பு
ஏரியில் எரிக்கப்படும் குப்பை நச்சுப்புகை பரவலால் பாதிப்பு
ஏரியில் எரிக்கப்படும் குப்பை நச்சுப்புகை பரவலால் பாதிப்பு
ADDED : ஜூலை 10, 2024 12:28 AM

நெய்குப்பி:அணுசக்தி துறையின் அணுபுரம் நகரியம், நெய்குப்பி ஊராட்சி ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்ததாக உள்ளன. நகரிய பகுதி குப்பையை, நகரிய நிர்வாகம் முறையாக சேகரித்து அழிக்கிறது. ஊராட்சிப் பகுதியில், குப்பை சேகரித்து அழிக்க, முறையான திட்டமிடல் இல்லை.
இங்குள்ள நரசங்குப்பம் ஏரிப்பகுதியில், ஊராட்சி ஊழியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை குவிக்கின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எரித்து அவற்றை அழித்து வருகின்றனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
நரசங்குப்பம் ஏரியில், பல ஆண்டுகளாக குப்பை குவித்து, அங்கேயே எரிக்கின்றனர். அதை எரிப்பதால் உருவாகும் நச்சுப்புகை, அணுபுரம், அய்யப்பன் நகர், அய்யாக்கண்ணு நகர், வி.எஸ்.ஆர்., நகர், ரிச் நகர் பகுதிகளில் நீண்டநேரம் பரவுகிறது.
நாங்கள் நச்சுப்புகையை சுவாசித்து, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறோம். குழந்தைகள், முதியோர், ஆஸ்துமா நோயாளிகள் மூச்சு விட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ஏரியில் நச்சுக்கழிவுகள் கலந்து, நிலத்தடியில் ஊடுருவி, நிலத்தடி நீரும் மாசடைகிறது. குடிநீரும் அசுத்தமடைந்து, அதை அருந்தும் அபாயத்திலும் உள்ளோம்.
முந்தைய கலெக்டர் ராகுல்நாத், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம், பாதிப்புகள் குறித்து விளக்கி, ஏரியில் குப்பை குவிப்பதையும், எரிப்பதையும் தடுக்க, தொடர்ந்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், குப்பை குவிப்பதும், எரிப்பதும் தொடர்கிறது.
அணுசக்தி துறையினர் பாதிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அலட்சியம் நீடித்தால், கல்பாக்கம் - செங்கல்பட்டு சாலையில், மறியல் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.