Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மகேந்திரா சிட்டியில் ரவுடிகள் அட்டகாசம் சோதனை சாவடி மூடப்பட்டதால் குற்றம் அதிகரிப்பு

மகேந்திரா சிட்டியில் ரவுடிகள் அட்டகாசம் சோதனை சாவடி மூடப்பட்டதால் குற்றம் அதிகரிப்பு

மகேந்திரா சிட்டியில் ரவுடிகள் அட்டகாசம் சோதனை சாவடி மூடப்பட்டதால் குற்றம் அதிகரிப்பு

மகேந்திரா சிட்டியில் ரவுடிகள் அட்டகாசம் சோதனை சாவடி மூடப்பட்டதால் குற்றம் அதிகரிப்பு

ADDED : ஆக 07, 2024 02:25 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்,

மறைமலை நகர் காவல் நிலையம், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டின் கீழ், கடந்த 2022ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மறைமலை நகர் காவல் நிலையத்தின் துவக்கபகுதியாக, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மகேந்திரா சிட்டி உள்ளது.

இந்த பகுதியில், காவல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இரும்பு கன்டெய்னரில் தனியாக அறை போல் அந்த சோதனைச்சாவடி அமைந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தவரை செயல்பட்டு வந்த சோதனைச்சாவடி, சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

மகேந்திரா சிட்டி பகுதியில் இரவு பணி முடித்து செல்வோரிடமிருந்து, அடிக்கடி மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள்நடக்கின்றன.

இங்கு, சோதனைச் சாவடி செயல்படாததால், புறநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச்செல்வோரையும்,குற்றங்கள் புரிய சென்னைபுறநகரை நோக்கிசெல்வோரையும் தடுப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இருந்த சோதனைச்சாவடி, மறைமலை நகர் அண்ணா சாலை -- ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ள நிலையில், கூடுதலாக சட்டம் - ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபடாத போலீசார், மறைமலை நகர் சிப்காட் தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் நின்று, வேலைக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை சோதனை செய்து, ஹெல்மெட், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவற்றுக்காக அபராதம் விதித்து வருகின்றனர்.

குறிப்பாக, அண்ணா சாலையில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சோதனைச்சாவடியில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்தில் தான் மறைமலை நகர் காவல் நிலையமே உள்ளது.

ஏதேனும் பிரச்னைஎன்றால் காவல் நிலையத்தில் இருந்தே, உடனடியாக போலீசார் வர வேண்டும். ஆனால், 8 கி.மீ., துாரத்தில் உள்ள மகேந்திரா சிட்டி சோதனைச்சாவடியில் இருந்து, போலீசார் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் மூடப்பட்டு உள்ள சோதனைச்சாவடியை திறக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீசார் ஒருவர் கூறியதாவது:

மகேந்திரா சிட்டி சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட இடத்தில், நெடுஞ்சாலையில் விளக்குகள் இல்லாததால், பணியில் ஈடுபடும் போலீசார் அவதியடைந்து வந்தனர். இதன் காரணமாக, நெடுஞ்சாலையில் மாற்று இடத்தில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us