/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
ADDED : ஜூலை 15, 2024 06:17 AM

மறைமலைநகர் : செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடு, மாடுகளின் உரிமையாளர்கள் தங்களின் கால்நடைகளை வீட்டில் கட்டி வளர்க்காமல், சாலைகளில் திரிய விடுகின்றனர். இவைகள் கூட்டமாக நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் சுற்றி திரிகின்றன.
மேலும், சாலையோரம் உள்ள பூ, காய்கறி கடைகளில் உள்ள உள்ளிட்டவற்றை உண்ணும் போது கடைகளின் உரிமையாளர்கள் துரத்துகின்றனர்.
இதனால், சாலையின் குறுக்கே ஓடும் மாடுகளால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
செங்கல்பட்டு நகர்ப்புறத்தில் பழைய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், மணி கூண்டு, அரசு மருத்துவமனை, சப் - கலெக்டர் வளாகம், மதுராந்தகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவிலான மாடுகள் சுற்றித் திரிகின்றன.
புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் -- கூடுவாஞ்சேரி சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் ஜி.எஸ்.டி., சாலையில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
கடந்த மாதம் ஜி.எஸ்.டி., சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீடியனில் இருந்த மாடு குறுக்கே சென்றதில், இருசக்கர வாகனத்தில் இருந்த மனைவி கீழே விழுந்து உயிரிழந்தார்.
அதே போல, மறைமலைநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடம்பூர் பகுதியில் மாடு குறுக்கே சென்றதில் கீழே விழுந்த பெண்ணிற்கு கையில் முறிவு ஏற்பட்டது.
மேலும், கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள மாடு அடைக்கப்படும் பட்டியை, 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் மாடுகளுக்கு தீவனம், தண்ணீர் போன்ற பராமரிப்பு பணியை செய்து வருகின்றனர்.
ஓராண்டில், 100 நாட்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். இதனால், மற்ற நாட்களில் பட்டியை முறையாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த பட்டியை ஆய்வு செய்த கலெக்டர், தீவனம் போன்றவைகள் முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
எனவே, ஊராட்சி அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆண்டு முழுதும் வேலை செய்யும் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க முயலும் போது, மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகளவில் உள்ளது.
மாடுகளை பிடிக்கச் செல்லும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். இருப்பினும் மாடுகள் பிடிக்கப்பட்டு, கொண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டு வருகிறது.
அபராத தொகை செலுத்திய பின், மாட்டின் உரிமையாளரிடம் மாடுகள் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாடுகளை பிடிக்க உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏதேனும் விபத்து சம்பவங்கள் நடைபெறும் போது மட்டும் கண்துடைப்புக்காக சில நாட்கள் மட்டும் மாடுகளை பிடிக்கின்றனர்.
- கோ.கணேஷ்,
சிங்கபெருமாள் கோவில்.