/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நகராட்சியாகிறது மாமல்லை சட்டசபையில் அறிவிப்பு நகராட்சியாகிறது மாமல்லை சட்டசபையில் அறிவிப்பு
நகராட்சியாகிறது மாமல்லை சட்டசபையில் அறிவிப்பு
நகராட்சியாகிறது மாமல்லை சட்டசபையில் அறிவிப்பு
நகராட்சியாகிறது மாமல்லை சட்டசபையில் அறிவிப்பு
ADDED : ஜூன் 24, 2024 06:19 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை, நகராட்சி நிர்வாகமாக தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சட்டசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லவர் கால சிற்பங்கள் உள்ள மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலா இடமாக விளங்குகிறது. இவ்வூர், கடந்த 1964ல் நகரிய பகுதியாக வகைப்படுத்தப்பட்டது.பின், 1994ல், பேரூராட்சி நிர்வாகம் - சிறப்புநிலை என மாற்றி, அதே வகை நிர்வாகமாக, தற்போதும் செயல்படுகிறது.
மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகளுடன், 15 வார்டுகள் உள்ளன. தற்போது, 19,000 பேர் வசிக்கின்றனர்.
இவ்வூரை நகராட்சி நிர்வாகப் பகுதியாக தரம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்க, 2011 மற்றும் 2023ம் ஆண்டுகளின் மக்கள்தொகை, 2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான ஆண்டு வருமானம், மூன்றாண்டு சராசரி வருமானம் உள்ளிட்ட விபரங்களை, நகராட்சி நிர்வாகத்துறை பெற்றது.
மக்கள்தொகை குறைவு என்றாலும், சுற்றுலா பகுதி சிறப்பு கருதி, அருகில் உள்ள ஊராட்சிகளின் பகுதிகளையும் இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நகராட்சியாக தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு அறிவித்துள்ளார்.