/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பரமன்கேணியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத அங்கன்வாடி மையம் பரமன்கேணியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத அங்கன்வாடி மையம்
பரமன்கேணியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத அங்கன்வாடி மையம்
பரமன்கேணியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத அங்கன்வாடி மையம்
பரமன்கேணியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத அங்கன்வாடி மையம்
ADDED : ஜூன் 12, 2024 01:30 AM

செய்யூர்:செய்யூர் அருகே பரமன்கேணி கிராமத்தில், பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தின் அருகே உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 25 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
பழைய அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மையம், மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது செயல்படுகிறது. போதுமான இடம், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், குழந்தைகள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
வெயில் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் போதிய இட வசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுவதால், விரைவில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
மையம் திறப்பு
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாபுராயன்பேட்டை ஊராட்சியில், புதிய அங்கன்வாடி மையம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கி, அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஊராட்சி தலைவர் நவநீதம் முன்னிலை வகித்தார். விழாவில், அங்கன்வாடி பணியாளர்கள், துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.