/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து; தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்' அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து; தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து; தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து; தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து; தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'
ADDED : ஜூலை 07, 2024 11:20 PM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு தாழம்பூரில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், தாய் - மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை மற்றும் மூத்த மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு, தாழம்பூரில் உள்ள 'காசாகிராண்ட் சுப்ரீம்' அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதர்சன், 37. இவர், ஆந்திர மாநிலம் தடாவில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி ரஞ்சனி, 36. தம்பதிக்கு சாத்விகா, 10, மனஸ்வினி, 6, என, இரண்டு மகள்கள் உள்ளனர். வார இறுதி நாட்களை முன்னிட்டு, தடாவில் இருந்து குடும்பத்தினருடன் சுதர்சன் தாழம்பூர் வந்தார். நேற்று முன்தினம் காலை தாழம்பூரில் இருந்து, மதுராந்தகம், கூடலுாரில் உள்ள தன் மாட்டு பண்ணையை பார்வையிட 'ஹூண்டாய்' காரில் குடும்பத்துடன் சென்றார்.
பின், நேற்று முன்தினம் இரவு திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாழம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் வந்தபோது, சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன பேருந்தில், சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மோதியது.
ஆம்னி பேருந்தின் பின்னே சென்ற சுதர்சனின் கார், ஆம்னி பேருந்து மீது மோத, காரின் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில், ஆம்னி பேருந்துக்கும் லாரிக்கும் இடையில் சிக்கிய கார் அப்பளமாக நொறுங்கியது. இதில், ரஞ்சனி மற்றும் இளைய மகள் மனஸ்வினி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சுதர்சன் மற்றும் சாத்விகாவை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காரில் சிக்கிய தாய், மகள் உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் வாயிலாக அப்புறப்படுத்தினர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 5 கி.மீ., துாரத்திற்கும் மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 2 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.