ADDED : மார் 14, 2025 01:17 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடத்திய, 22 பெண்கள் உட்பட 53 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், தி.மு,க., சட்டசபை தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை திரும்பப் பெற வேண்டும். தி.மு.க., சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில், சி.பி.எஸ்., திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் அருகில், மாநில ஒருங்கிணைப்பாளர் தில்லைகோவிந்தன் தலைமையில், மறியல் போராட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, 22 பெண்கள் உட்பட 53 பேரை, போலீசார் கைது செய்து, மணப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடுவித்தனர்.