/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குடிசைகளுக்கு மாற்றாக 4,000! கான்கிரீட் வீடுகள்... பணிகளின் தரத்தை கண்காணிக்க உத்தரவு குடிசைகளுக்கு மாற்றாக 4,000! கான்கிரீட் வீடுகள்... பணிகளின் தரத்தை கண்காணிக்க உத்தரவு
குடிசைகளுக்கு மாற்றாக 4,000! கான்கிரீட் வீடுகள்... பணிகளின் தரத்தை கண்காணிக்க உத்தரவு
குடிசைகளுக்கு மாற்றாக 4,000! கான்கிரீட் வீடுகள்... பணிகளின் தரத்தை கண்காணிக்க உத்தரவு
குடிசைகளுக்கு மாற்றாக 4,000! கான்கிரீட் வீடுகள்... பணிகளின் தரத்தை கண்காணிக்க உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 01:30 AM

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி, 140 கோடி ரூபாயில் துவங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுதும், 4,000 பயனாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளின் தரம் மற்றும் கட்டுமானப் பணிகளை கண்காணிக்க, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி, கான்கிரீட் வீடுகள் கட்டித்தர தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் என்ற பெயரில், குடிசை, ஓட்டு வீடுகளை அப்புறப்படுத்தி, கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
கடந்த 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் பசுமை வீடு வழங்கும் திட்டத்தை, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என பெயர் மாற்றி, குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி, கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், ஒரு வீடு கட்ட 3.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த மார்ச் மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 358 ஊராட்சிகளிலும், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கணக்கெடுக்கும் பணியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், 4,000 குடிசை வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கலெக்டருக்கு கருத்துருவை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பின், 4,000 குடிசை வீடுகளுக்கு மாற்றாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்ட, 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
இப்பணிகளை செயல்படுத்த, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, கடந்த சில நாட்களுக்கு முன், கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
தற்போது, எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும், வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், வீடு கட்டும் பணியை பயனாளிகள் துவக்கி, கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வீடுகள் கட்டுமானப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மூன்று மாதங்களில் முடித்து, கட்டுமானப் பணிகளை துவக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்
செங்கல்பட்டு.