Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/தோள் கொடுக்கும் தோழா பாலா... * பதக்கம் நோக்கி போபண்ணா

தோள் கொடுக்கும் தோழா பாலா... * பதக்கம் நோக்கி போபண்ணா

தோள் கொடுக்கும் தோழா பாலா... * பதக்கம் நோக்கி போபண்ணா

தோள் கொடுக்கும் தோழா பாலா... * பதக்கம் நோக்கி போபண்ணா

ADDED : ஜூலை 16, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில், ஸ்ரீராம் பாலாஜி உடன் சாதிப்பேன்,'' என ரோகன் போபண்ணா தெரிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் வரும் 26ல் துவங்குகிறது. இதில் ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் 32 அணிகள் பங்கேற்கும். 'டாப்-10' வீரர்களுக்கு முதலில் வாய்ப்பு அளிக்கப்படும். இதன் அடிப்படையில் உலகின் 'நம்பர்-4' வீரரான இந்தியாவின் அனுபவ போபண்ணா 44, வாய்ப்பு பெற்றார். தன்னுடன் விளையாட தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜியை 34, (ரேங்கிங்கில் 62வது இடம்) தேர்வு செய்துள்ளார்.

மூன்றாவது முறை

ஏற்கனவே லண்டன் (2012) ரியோவில் (2016) முத்திரை பதித்த போபண்ணா, மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். அறிமுக வீராக சாதிக்க காத்திருக்கிறார் பாலாஜி. கடந்த காலங்களில் மகேஷ் பூபதி, பயஸ், சானியா போன்ற நட்சத்திரங்களுடன் விளையாடிய போபண்ணாவுக்கு இம்முறை சுமை அதிகம். பாலாஜிக்கு போதிய அனுபவம் இல்லாததால், கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். ஏடிபி தொடர்களில் போபண்ணா-பாலாஜி சேர்ந்து விளையாடியது இல்லை. ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சியாக, ஹாம்பர்க் ஓபன் உட்பட சில தொடர்களில் சேர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து போபண்ணா கூறியது:

ஒலிம்பிக்கில் ஒவ்வொரு போட்டியிலும் பாலாஜி (செல்லமாக பாலா) உடன் சேர்ந்து வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் பாலாஜி சிறப்பாக விளையாடினார். உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தியுள்ளார். களத்தில் அனல் பறக்க விளையாடும் திறன் பாலாவிடம் உள்ளது.

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் களிமண் களத்தில் நடக்க உள்ளன. இத்தகைய களத்தில் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று விளையாடுவதில் வல்லவர் பாலாஜி. இதனால் தான் இரட்டையரில் பங்கேற்க இவரை தேர்வு செய்தேன். ஒருவேளை புல் தரை களமாக இருந்திருந்தால், மற்றொரு இந்திய வீரரான யூகி பாம்ப்ரியை தேர்வு செய்திருப்பேன்.

பாலாஜியின் பலம்

சிறப்பாக 'சர்வீஸ்' செய்வது தான் பாலாஜியின் பலம். 'பவர்புல் ஷாட்' அடிப்பதிலும் கெட்டிக்காரர். இது இரட்டையர் போட்டியில் சாதிக்க உதவும். ஒலிம்பிக்கில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. சிறப்பாக தயாராக வேண்டியது அவசியம். அனைத்து நட்சத்திரங்களும் பதக்கம் வெல்வதையே இலக்காக கொண்டிருப்பர். நுாறு சதவீத நம்பிக்கையுடன் களமிறங்குவர். கடந்த முறையை காட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பர். நாங்களும் பதக்கம் வெல்வதில் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு போபண்ணா கூறினார்.

பயஸ் வழியில்...

கடந்த 1996ல், அட்லான்டா ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் பயஸ் வெண்கலம் வென்றார். இதற்கு பின் டென்னிசில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் 43 வயதில் பட்டம் வென்று சாதித்தார் போபண்ணா. நல்ல 'பார்மில்' இருக்கும் இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரகாசிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us