/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/அஞ்சாத அல்காரஸ்...அசராத சின்னர் * டென்னிசில் மோதும் இரு துருவம் அஞ்சாத அல்காரஸ்...அசராத சின்னர் * டென்னிசில் மோதும் இரு துருவம்
அஞ்சாத அல்காரஸ்...அசராத சின்னர் * டென்னிசில் மோதும் இரு துருவம்
அஞ்சாத அல்காரஸ்...அசராத சின்னர் * டென்னிசில் மோதும் இரு துருவம்
அஞ்சாத அல்காரஸ்...அசராத சின்னர் * டென்னிசில் மோதும் இரு துருவம்
ADDED : ஜூன் 10, 2025 11:27 PM

பாரிஸ்: டென்னிஸ் அரங்கில் அல்காரஸ்-சின்னர், சளைக்காமல் போராடி சரித்திரம் படைக்கின்றனர். பிரெஞ்ச் ஓபன் பைனலில், 5 மணி நேரம் 29 நிமிடத்திற்கு ஒரு மாரத்தான் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அல்காரஸ், கோப்பை கைப்பற்றினார். சின்னரோ ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார்.
பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் உலகின் 'நம்பர்-2' வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் 22, 'நம்பர்-1' நட்சத்திரமான இத்தாலியின் சின்னர் 23, மோதினர். முதல் இரு செட்களில் சின்னர் வென்றார். மூன்றாவது செட்டில் முன்னிலையில் இருந்தார். இந்த சமயத்தில், களிமண் களத்தில் பெரிய 'கம்பேக்' கொடுத்தார் அல்காரஸ். அடுத்த 3 செட்களை கைப்பற்றினார். 5 மணி நேரம், 29 நிமிடம் நீடித்த ஆட்டத்தின் முடிவில், அல்காரஸ் 4-6, 6-7, 6-4, 7-6, 7-6 என வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மொத்தம் உள்ள 385 புள்ளியில் அல்காரஸ் 193, சின்னர் 192 பெற்றனர். ஒரு புள்ளி வித்தியாசத்தில் தான் கோப்பையை பறிகொடுத்தார் சின்னர்.
தொடரும் நேருக்குநேர்
டென்னிஸ் அரங்கில் எவர்ட்-நவரத்திலோவா, போர்க்-மெக்கன்ரோ, பெடரர்-நடால் மோதல் பிரபலம். இவர்கள் வரிசையில் அல்காரஸ்-சின்னர் சேர்ந்துள்ளனர். கடந்த 6 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை இவர்களே பகிர்ந்து கொண்டுள்ளனர். அல்காரசை பொறுத்தவரை யு.எஸ்., ஓபன் (2022), விம்பிள்டன் (2023, 24), பிரெஞ்ச் ஓபன் (2024, 25) என 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சின்னர், 3 மாத தடையை சந்தித்தார். இதிலிருந்து மீண்டு அசத்தி வருகிறார். ஆஸ்திரேலிய ஓபன் (2024, 25), யு.எஸ்., ஓபன் (2024) என 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றியுள்ளார். கடந்த 50 போட்டிகளில் 47ல் வென்றார். இதில் 3 போட்டிகளில் அல்காரசிடம் தான் தோற்றார். களத்தில் அல்காரஸ் ஆக்ரோஷமாக இருப்பார். படுவேகமாக பந்தை திருப்பி அனுப்புவார். சின்னர் அடக்கி வாசித்தாலும், அசுர வேகத்தில் 'ஷாட்' அடிப்பதில் வல்லவர்.
விம்பிள்டனில் 'விறுவிறு'
அல்காரஸ் கூறுகையில்,''நாங்கள் மோதும் போது உயர் தர ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். பைனலின் மூன்றாவது செட் துவக்கம் வரை சின்னர் ஆதிக்கம் செலுத்தினார். இதை பொருட்படுத்தாது, துணிச்சலாக போராாடி வென்றேன். பிரெஞ்ச் ஓபனில் இருந்து சின்னர் பாடம் படிப்பார். அடுத்த முறை வலிமையாக மீண்டு வருவார்,''என்றார்.
சின்னர் கூறுகையில்,''பைனலின் முடிவு எனக்கு சாதகமாக அமையாததால், மனம் வலித்தது. அருமையான கோப்பையை வெல்ல தவறினேன்,''என்றார்.
வரும் ஜூன் 30ல் லண்டனில் விம்பிள்டன் தொடர் துவங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியனாக அல்காரஸ் களமிறங்க உள்ளார். இவருக்கு பதிலடி தர சின்னர் காத்திருக்கிறார். ஒருவேளை இருவரும் பைனலில் மோதினால், இன்னொரு ஆக்ரோஷ ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
அடுத்த தலைமுறை
இந்திய டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி கூறுகையில்,''பெடரர், நடால், ஆன்டி முர்ரே, ஜோகோவிச் என நான்கு நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். தற்போது அல்காரஸ், சின்னர் புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளனர். போட்டிகளில் 4-5 மணி நேரம் வெற்றிக்காக போராடுகின்றனர். அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு உலக டென்னிசை முன்னோக்கி அழைத்துச் செல்வர்,''என்றார்.