ADDED : ஜூன் 07, 2024 11:08 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு ஸ்பெயினின் அல்காரஸ் முன்னேறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் 'நம்பர்-2' இத்தாலியின் ஜானிக் சின்னர் 22, 'நம்பர்-3' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 21, மோதினர்.
முதல் செட்டை 2-6 என இழந்த அல்காரஸ், 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். மூன்றாவது செட்டில் சுதாரித்துக் கொண்ட சின்னர் 6-3 என தன்வசப்படுத்தினார். நான்காவது செட்டில் எழுச்சி கண்ட அல்காரஸ் 6-4 என வென்றார். இதனையடுத்து போட்டியின் முடிவு 5வது செட்டுக்கு சென்றது. இதில் அல்காரஸ் 6-3 எனக் கைப்பற்றினார்.
நான்கு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அல்காரஸ் 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.
கிடைக்குமா 'ஹாட்ரிக்'
பெண்கள் ஒற்றையர் பைனலில் இன்று உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக் 23, 'நம்பர்-15' இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 28, மோதுகின்றனர். பவுலினிக்கு எதிராக விளையாடிய 2 போட்டியிலும் (2018, 2022) வென்ற 'நடப்பு சாம்பியன்' ஸ்வியாடெக் இன்று அசத்தும் பட்சத்தில் பிரெஞ்ச் ஓபனில் தனது 'ஹாட்ரிக்' பட்டத்தை கைப்பற்றலாம்.
இத்தாலியின் பவுலின், இன்று சாதிக்கும் பட்சத்தில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பைக்கு முத்தமிடலாம்.