ADDED : ஜூன் 22, 2024 10:46 PM

லாகோஸ்: உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் ஒற்றையர் பைனலில் இந்தியா முதன் முறையாக பங்கேற்க உள்ளது.
நைஜீரியாவில் உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சக வீராங்கனை யாஷஸ்வினியை 3-0 (11-6, 11-9, 11-8) என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சுதிர்த்தா, 3-2 (11-9, 3-11, 9-11, 11-9, 11-6) என தென் கொரியாவின் ஷின் யுபினை வென்றார்.
அடுத்து நடக்கும் அரையிறுதியில் ஸ்ரீஜா, சுதிர்த்தா மோதவுள்ளனர். இதில் யார் வென்றாலும் இந்தியா சார்பில் பைனலில் பங்கேற்பார். இதனால் உலக 'கன்டெண்டர்' தொடர் ஒற்றையர் பைனலில் முதன் முறையாக இந்தியா பங்கேற்று சாதனை படைத்தது.
நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஆயிஹா, 3-0 (11-6, 14-12, 11-5) என எகிப்தின் பரிதாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
* ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் மானவ் விகாஷ், ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 என சீனாவின் ஜியான்குன், யுடே காங் ஜோடியை வென்று, பைனலுக்குள் நுழைந்தது. பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஆயிஹா-சுதிர்த்தா, ஸ்ரீஜா-அர்ச்சனா ஜோடி மோத உள்ளன.