ADDED : செப் 21, 2025 11:04 PM

டோக்கியோ: உலக தடகளத்தில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா, 16 தங்கம் உட்பட 26 பதக்கம் வென்றது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் ஷா'காரி ரிச்சர்ட்சன், மெலிஸ்சா உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 41.75 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை முறையே ஜமைக்கா (41.79 வினாடி), ஜெர்மனி (41.87) கைப்பற்றின.
ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் நோவா லைஸ், கிறிஸ்டியன் கோல்மன், கென்னெத் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 37.29 வினாடியில் கடந்து தங்கம் வென்றது. இது, இம்முறை நோவா லைஸ் வென்ற 2வது தங்கம். ஏற்கனவே 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். தவிர இவர், உலக தடகளத்தில் தனது 8வது தங்கம், 10வது பதக்கத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை கனடா (37.55 வினாடி), நெதர்லாந்து (37.81) பிடித்தன.
பெண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் இசபெல்லா, லின்னா, ஆலியா பட்லர், சிட்னி மெக்லாக்லின் அடங்கிய அமெரிக்க அணி (3 நிமிடம், 16.61 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை முறையே ஜமைக்கா, நெதர்லாந்து வென்றன.
ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் ஏமாற்றிய அமெரிக்க அணி (2 நிமிடம், 57.83 வினாடி) வெள்ளி வென்றது. போட்ஸ்வானா அணி (2 நிமிடம், 57.76 வினாடி) தங்கத்தை கைப்பற்றியது.
இந்தியா ஏமாற்றம்
இம்முறை 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என, 26 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது. அடுத்த இரு இடங்களை கென்யா (7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), கனடா (3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) பிடித்தன. இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.