/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒலிம்பிக் ஜோதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்...: அதிசயமே அசந்துபோகும் அதிசயம்ஒலிம்பிக் ஜோதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்...: அதிசயமே அசந்துபோகும் அதிசயம்
ஒலிம்பிக் ஜோதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்...: அதிசயமே அசந்துபோகும் அதிசயம்
ஒலிம்பிக் ஜோதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்...: அதிசயமே அசந்துபோகும் அதிசயம்
ஒலிம்பிக் ஜோதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்...: அதிசயமே அசந்துபோகும் அதிசயம்
ADDED : ஜூலை 28, 2024 12:04 AM

பாரிஸ்: துாரத்துல இருந்து பார்த்தா நெருப்பு வளையம், பக்கத்துல போய் பார்த்தா மின்னொளி அதிசயமாக ஒளிர்கிறது பாரிஸ் ஒலிம்பிக் ஜோதி. இதன் அறிவியல் பின்னணியை பார்த்து உலகம் வியக்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடக்கிறது. 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள்பங்கேற்கின்றனர்.பாரிசின் சென் நதியில் 6 கி.மீ., துாரத்திற்குதுவக்க விழா நடந்தது.இந்தியாவின் சிந்து உட்பட அனைத்து நாட்டு நட்சத்திரங்களும் படகில் அணிவகுத்து வந்தனர். இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் அரங்கேறின. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார்.
நான்கு மணி நேர துவக்க விழாவின் நிறைவாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு நடந்தது. பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் ஜிடேன், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால் என பலரது கைக்கு மாறிய ஜோதி, பிரான்சின் 100 வயது சைக்கிள் பந்தய ஒலிம்பிக் சாம்பியன் சார்லஸ் கோஸ்டாவிடம் ஒப்படைக்கப்பட்டது. வீல் சேரில் வந்த இவர், ஜோதியை பிரான்சின் ஜூடோ ஜாம்பவான் டெடி ரைனர், ஓட்ட பந்தைய வீராங்கனை மேரி ஜோஸ் பெரேக் வசம் கொடுத்தார். இருவரும் சேர்ந்து ஜோதியை ஏற்றி வைக்க, 'ஹாட் -ஏர்' பலுான் மேலே மிதக்க, ரசிகர்கள் பரவசம் அடைந்தனர்.
என்ன தொழில்நுட்பம்: புதுமையான ஒலிம்பிக் ஜோதியை பிரான்சின் மாத்யூ லெஹானியர் வடிவமைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக எரிபொருள் எதுவும் பயன்படுத்தப்படாமல், நுாறு சதவீதம் எலக்ட்ரிக் ஜோதியாக உருவாக்கப்பட்டுள்ளது. 23 அடி விட்டம், 100 அடி உயரம், 72 அடி அகலம் கொண்டது. மேலே பலூன் இணைக்கப்பட்டு உள்ளது.
பலூனின் அடிப்பகுதியில் உள்ள வளையத்தில் 40 எல்இடி விளக்குகள் உள்ளன. இதை சுற்றி இருக்கும் 200 சிறிய முனைகளில் இருந்து உயர் அழுத்தத்தில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இவை நீராவியாகி, மேக புகையை உருவாக்கிறது. இதன் மீது எல்இடி ஒளி வெள்ளம் விழும் போது, நிஜமான தீ பிழம்பு போல ஜோதி ஒளிர்கிறது.
'எலக்ட்ரிக்' புரட்சி: மாத்யூ லெஹானியர் கூறுகையில்,''பிரான்சின் மான்ட்கோல்பியர் சகோதரர்கள் 1783ல் 'ஹாட் ஏர் பலுானை' கண்டுபிடித்தனர். இவர்களை போற்றும் விதமாக ஒலிம்பிக் ஜோதி உருவாக்கப்பட்டது. தண்ணீர், எல்இடி விளக்கு ஒளியின் மூலம் நெருப்பு எரிவது போன்ற 'மேஜிக்' நிகழ்கிறது. பிரான்ஸ் மின் வாரியம் உறுதுணையாக இருந்தது. தண்ணீர், மின்சாரத்தை தரையில் மட்டுமல்லாமல் பலுான் மேலே எழும்பும் போது கூட விநியோகிக்கிறது. பிரான்சின் சுதந்திர உணர்வை குறிக்கிறது. எதிர்காலத்தில் மின்சாரம் தான் ஆதிக்கம் செலுத்தும். எலக்ட்ரிக் புரட்சியை ஒலிம்பிக் ஜோதி உணர்த்துகிறது. என்றார்.
நேரில் ரசிக்கலாம்: பிரான்சின் மையப்பகுதியில் அமைந்துள்ள டுயுலிரியஸ் கார்டனில், கண்ணாடியிலான பிரமிட் வடிவ நுழைவாயில் அருகே ஒலிம்பிக் ஜோதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. காலையில் கார்டனில் இருக்கும் ஒலிம்பிக் ஜோதியை, ஒவ்வொரு நாளும் 10,000 மக்கள் நேரில் கண்டு ரசிக்கலாம். மாலையில் 197 அடி உயரத்திற்கு மேலே எழுப்பப்படும். அதிகாலை 2 மணி வரை வானில் மிதக்கும்.
மழை, கிளர்ச்சியாளர்களால் ரயில் போக்குவரத்து பாதிப்பு, ஒலிம்பிக் கொடியை தலைகீழாக ஏற்றியது, வரலாற்று சம்பவங்களை தவறாக சித்தரித்தது என பல பிரச்னைகள் துவக்க விழாவில் இருந்தாலும், புதுமையான ஒலிம்பிக் ஜோதி அனைவரையும் கவர்ந்தது.