ADDED : ஜூன் 12, 2025 11:00 PM

ஆம்ஸ்டர்டாம்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள இந்திய அணி தனது 12வது போட்டியில் நேற்று, மீண்டும் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார். 9வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னரில்' அர்ஜென்டினாவின் தாமஸ் டொமன்டி கோல் அடித்தார். முதல் பாதியில் ஸ்கோர் 1-1 என சமனில் இருந்தது.
போட்டியின் 50வது நிமிடத்தில் தாமஸ், மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்தியா 1-2 என பின்தங்கியது. போட்டி முடிவதற்கு கடைசி 2 நிமிடம் இருந்த போது, இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை, ஜுக்ராஜ் சிங் வீணடித்து, அதிர்ச்சி கொடுத்தார்.
முடிவில் இந்திய அணி 1-2 என தோல்வியடைந்தது. இது, இத்தொடரில் சந்தித்த 4வது தோல்வி. தற்போது நெதர்லாந்து (23 புள்ளி), அர்ஜென்டினா (18), இங்கிலாந்து (16) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. இந்தியா (15) 5வது இடத்தில் (12 போட்டியில் 5 வெற்றி, 7 தோல்வி) உள்ளது.