Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மனு பாகர் படித்தார் கீதையென்னும் பாடம் * மன உறுதியுடன் 'சுட்டார்' முதல் பதக்கம்...

மனு பாகர் படித்தார் கீதையென்னும் பாடம் * மன உறுதியுடன் 'சுட்டார்' முதல் பதக்கம்...

மனு பாகர் படித்தார் கீதையென்னும் பாடம் * மன உறுதியுடன் 'சுட்டார்' முதல் பதக்கம்...

மனு பாகர் படித்தார் கீதையென்னும் பாடம் * மன உறுதியுடன் 'சுட்டார்' முதல் பதக்கம்...

ADDED : ஜூலை 29, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
சாட்டியாரக்ஸ்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார் மனு பாகர். நேற்று நடந்த 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் வெண்கலம் கைப்பற்றி அசத்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் நடக்கிறது. பாரிசில் இருந்து 273 கி.மீ., துாரத்தில் உள்ள சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் துப்பாக்கிசுடுதல் போட்டி நடக்கிறது. நேற்று பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட 22 வயதான மனு பாகர், 580 புள்ளி எடுத்து, மூன்றாவது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

நேற்று பைனல் நடந்தது. மொத்தம் 24 வாய்ப்புகள் தரப்பட்டன. முதல் 10 வாய்ப்புகளில் 100.3 புள்ளி எடுத்த மனு பாகர், 3வது இடம் பிடித்தார். அடுத்து 'எலிமினேசன்' சுற்று நடந்தது. ஒவ்வொரு இரு வாய்ப்பு முடிவிலும் கடைசி இடம் பெற்றவர் வெளியேறினர். 20 சுற்று முடிவில் 5 வீராங்கனைகள் வெளியேறினர். தென் கொரியாவின் ஓ யே ஜின் (202.5), கிம் ஏஜி (201.9), மனு பாகர் (201.3) 'டாப்-3' இடம் பிடித்தனர். 21, 22 வது சுற்றில் சிறப்பாக செயல்பட்ட மனு பாகர், 221.7 புள்ளி எடுத்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். எப்படியும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றுவார் என நம்பப்பட்டது.

0.1 புள்ளி வித்தியாசம்

இம்மகிழ்ச்சி சில நிமிடம் கூட நீடிக்கவில்லை. 3வது இடத்தில் இருந்த கிம் ஏஜி, 221.8 புள்ளி எடுக்க, இரண்டாவது இடத்தை பிடித்தார். மனு பாகர், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட, வெண்கலப் பதக்கம் தான் கிடைத்தது. தங்கம், வெள்ளிப்பதக்கத்தை தென் கொரியாவின் ஓ யே ஜின் (243.2), கிம் ஏஜி (241.3) கைப்பற்றினர்.

முதல் வீராங்கனை

இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. தவிர ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார் மனு பாகர்.

பைனலில் ரமிதா

பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' தனிநபர் தகுதிச்சுற்று நேற்று நடந்தது. இந்தியா சார்பில் ரமிதா, இளவேனில் களமிறங்கினர். 'டாப்-8' இடம் பெற்றால் மட்டும் பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இந்தியாவின் ரமிதா, 631.5 புள்ளி எடுத்து 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். இளவேனில் 630.7 புள்ளி மட்டும் எடுக்க, 10 வது இடத்துக்கு தள்ளப்பட்டு, பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

அர்ஜுன் நம்பிக்கை

ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' தனிநபர் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் அர்ஜுன், பாபுதா, சந்தீப் சிங் பங்கேற்றனர். இதில் அர்ஜுன் 7வது (630.1 புள்ளி), சந்தீப் சிங் 12வது (629.9) இடம் பிடித்தனர். 'டாப்-8' இடம் பிடித்தால் மட்டும் பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், அர்ஜுன் மட்டும் பைனலுக்கு முன்னேறினார்.

12 ஆண்டுக்குப் பின்...

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 12 ஆண்டுக்குப் பின் பதக்கம் வென்றது. முன்னதாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.

5 வது பதக்கம்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியா நேற்று ஐந்தாவது பதக்கம் (1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) கைப்பற்றியது (மனுபாகர்). இதற்கு முன் 2008ல் அபினவ் பிந்த்ரா (தங்கம், பீஜிங்), 2004 ல் ராஜ்யவர்தன் ரத்தோர் (வெள்ளி, ஏதென்ஸ்), 2012ல் விஜய் குமார் (வெள்ளி), ககன் நரங் (வெண்கலம், லண்டன்) பதக்கம் வென்றிருந்தனர்.

'பயோ-டேட்டா'

பெயர்: மனு பாகர்

பிறந்த நாள்: 18-02-2002

பிறந்த இடம்: கோரியா, ஹரியானா

விளையாட்டு: துப்பாக்கிசுடுதல்

பதக்கம்: 2018 காமன்வெல்த், உலக கோப்பையில் தங்கம், ஒலிம்பிக்கில் வெண்கலம்

இதுவரை: 15 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்

(சர்வதேச தொடரில்)

ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,'துப்பாக்கிசுடுதலில் வெண்கலம் வென்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க எண்ணிக்கையை துவக்கி வைத்துள்ள மனுபாகருக்கு வாழ்த்துகள். இவரால் இந்தியா பெருமைப்படுகிறது. இந்த வெற்றி, இந்திய பெண்கள் உட்பட அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் ஊக்கம் தரும். எதிர்காலத்தில் கூடுதல் சாதனை படைக்க வாழ்த்துகள்,' என்றார்.

பிரதமர் பாராட்டு

பிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில்,' பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெண்கலம் வென்ற மனு பாகருக்கு வாழ்த்துகள். இந்த பதக்கம் கூடுதல் ஸ்பெஷலானது. ஏனெனில், ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்துள்ளார். இது வியக்கத்தக்கது,' என தெரிவித்துள்ளார். தவிர, மனுபாகரை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மோடி.

அபினவ் பிந்த்ரா மகிழ்ச்சி

பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கிசுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா கூறுகையில்,''உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, கடின உழைப்பு, ஆர்வம் உள்ளிட்டவை உண்மையில் பலன் தந்துள்ளது. இந்த வெள்ளி விடாமுயற்சிக்கு கிடைத்தது. தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்,'' என்றார்.

கடவுள் நம்பிக்கை

மனுபாகர் கூறுகையில்,'' டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின் கடவுள் மீதான நம்பிக்கை அதிகமானது. பகவத் கீதையை படித்து, அதில் உள்ளபடி நடக்க முயற்சித்தேன். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே', மனிதர்களால் விதியை கட்டுப்படுத்த முடியாது என அறிந்து கொண்டேன். அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனிடம்,'இலக்கில் மட்டும் கவனம் செலுத்து,' என்பார். இது மட்டுமே எனது மனதில் இருந்தது. இதனால் தான் சாதிக்க முடிந்தது. பதக்கம் வென்ற மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. எனது வெற்றியை தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன்,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us