ADDED : ஜூன் 07, 2025 11:21 PM

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் பெண்கள் பிரிவில் ஹம்பி, முதலிடத்துக்கு முன்னேறினார்.
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') தொடர் நடந்தது. மொத்தம் 6 பேர் பங்கேற்றனர். 9 சுற்று முடிவில் நார்வேயின் கார்ல்சன் (15.0), இந்தியாவின் குகேஷ் (14.5), அமெரிக்காவின் நகமுரா (13.0), பேபியானோ (12.5), பேபியா, இந்தியாவின் அர்ஜுன் (11.5) 'டாப்-5' இடத்தில் இருந்தனர். கடைசி, 10வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில், பேபியானோவை சந்தித்தார். இதன் 48 வது நகர்த்தலில் செய்த தவறு காரணமாக, 50வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைந்தார்.
கார்ல்சன், அர்ஜுன் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அர்ஜுன் வெற்றி பெற்றார். இதையடுத்து 16 புள்ளி பெற்ற கார்ல்சன், நார்வே தொடரில் 7வது முறையாக சாம்பியன் ஆனார். ரூ. 53 லட்சம் பரிசு பெற்றார். பேபியானோ 15.5 புள்ளியுடன் (ரூ. 26.40 லட்சம்) இரண்டாவது இடம் பெற்றார். குகேஷிற்கு (14.5) 3வது இடம், ரூ. 15.10 லட்சம் கிடைத்தது. 5வது இடம் பெற்ற அர்ஜுன் ரூ. 11.32 லட்சம் பெற்றார்.
ஹம்பி 'மூன்று'
பெண்கள் பிரிவில் 10வது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, சீனாவின் வென்சுனை 'டை பிரேக்கரில்' வென்றார். முடிவில் 15 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். உக்ரைனின் அனா முஜிசக் (16.5), சீனாவின் டிங் ஜீ (16) முதல் இரு இடம் பிடித்தனர். இந்தியாவின் வைஷாலிக்கு (11) 5வது இடம் கிடைத்தது.