ADDED : ஜூன் 01, 2025 11:34 PM

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் 5வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
நார்வேயில், சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஓபன் பிரிவில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். இதன் 5வது சுற்றில் அர்ஜுன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் குகேஷ் (கருப்பு), சீனாவின் யி வெய் (வெள்ளை) மோதினர். இதில் குகேஷ் 56வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு 5வது சுற்றில் நார்வேயின் கார்ல்சன் (கருப்பு), அமெரிக்காவின் பேபியானோ கருவானாவை (வெள்ளை) வீழ்த்தினார்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் 6.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் கார்ல்சன் (9.5 புள்ளி), கருவானா (8), நகமுரா (6.5) உள்ளனர். கடைசி இரு இடங்களில் யி வெய், குகேஷ் (தலா 5.5 புள்ளி) உள்ளனர்.
ஹம்பி முதலிடம்: பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜீயை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி, ஸ்பெயினின் சாராவை தோற்கடித்தார். ஐந்து சுற்றுகளின் முடிவில் ஹம்பி, 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். வைஷாலி (4.5 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார்.