ADDED : ஆக 01, 2024 11:56 PM

துருக்கி துப்பாக்கி சுடுதல் வீரர் யூசுப் டிகெக், 51 தான், இப்போது சமூகவலைதளங்களில் பிரபலம். 'டி-ஷர்ட்' அணிந்தவாறு, 'பாக்கெட்டில்' ஒருகையை விட்டுக் கொண்டு ரொம்ப 'கேஷுவலாக' சுட்டார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சக வீராங்கனை செவ்வல் இல்யாடா தர்ஹான் உடன் சேர்ந்து வெள்ளி வென்றார்.
துப்பாக்கி சுடுதலில் துல்லியமாக இலக்கை குறி பார்க்க, ஒரு கண்ணில் கவர், சிறப்பு லென்ஸ்கள், வைசர், காதுகளை மறைக்க சிறப்பு உபகரணங்களை பயன்படுத்துவர். ஆனால், யூசுப் வெறும் கண்ணாடி மட்டும் அணிந்து அனாயசமாக சுட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மிகவும் 'கூலாக' செயல்பட்ட இவருக்கு ஐந்து முறை ஒலிம்பிக்கில் (2008, 2012, 2016, 2020, 2024) பங்கேற்ற அனுபவம் உண்டு. நடனம் ஆடுவது, பூனை வளர்ப்பது பிடிக்குமாம். பூனையை போல இலக்கை துல்லியமாக தாக்குவதாக 'நெட்டிசன்கள்' வர்ணித்துள்ளனர். யூசுப் டிகெக் தொர்டர்பான 'மீம்ஸ்' லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளன.