/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அது ஒரு அழகிய இந்திய ஹாக்கி பொற்காலம்... * இன்று உலக கோப்பை வென்ற பொன்விழா அது ஒரு அழகிய இந்திய ஹாக்கி பொற்காலம்... * இன்று உலக கோப்பை வென்ற பொன்விழா
அது ஒரு அழகிய இந்திய ஹாக்கி பொற்காலம்... * இன்று உலக கோப்பை வென்ற பொன்விழா
அது ஒரு அழகிய இந்திய ஹாக்கி பொற்காலம்... * இன்று உலக கோப்பை வென்ற பொன்விழா
அது ஒரு அழகிய இந்திய ஹாக்கி பொற்காலம்... * இன்று உலக கோப்பை வென்ற பொன்விழா
ADDED : மார் 14, 2025 11:34 PM

புதுடில்லி: இந்திய ஹாக்கி அணி உலக கோப்பை வென்று 50 ஆண்டுகளாகிறது. இதன் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடக்க உள்ளது.
மலேசியாவில் 1975ல் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. கோலாலம்பூரில் உள்ள மெர்டகா மைதானத்தில் 1975, மார்ச் 15ல் நடந்த பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதை காண 50,000 ரசிகர்கள் திரண்டனர். 17வது நிமிடத்தில் ஜாகித் ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. இதற்கு இந்தியாவின் சுர்ஜித் சிங் (44) பதிலடி கொடுத்தார். பின் இந்திய 'ஹாக்கி மந்திரவாதி' தயான்சந்தின் மகன் அசோக் குமார் (51) ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 2-1 என வென்று, உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. இது தான் ஹாக்கியில் இந்தியா வென்ற ஒரே உலக கோப்பை. இதன் 50வது ஆண்டு பொன்விழா இன்று டில்லியில் நடக்க உள்ளது.
சாதனைக்கு அங்கீகாரம்
அப்போதைய இந்திய அணி கேப்டன் அஜித் பால் சிங் கூறுகையில்,''உலக கோப்பை தொடரில் பல சவால்களை கடந்து சாதித்தோம். மலேசியாவுக்கு எதிரான அரையிறுதியில், ஒரு கட்டத்தில் 2-1 என பின்தங்கினோம். பின் கூடுதல் நேரத்தில் வென்றோம். பைனலில் பாகிஸ்தானை வென்றது மிகவும் ஸ்பெஷல். 'ஹாக்கி இந்தியா' கூட்டமைப்பு வீரர்களை கவுரவிப்பது நல்ல விஷயம். தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.
இன்று பழைய நண்பர்களை சந்திக்க காத்திருக்கிறேன். எங்களது மகத்தான வெற்றியை ஹாக்கி இந்தியா அமைப்பு கொண்டாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. 1975ல் இந்தியா உலக கோப்பை வென்றது பெரிய சாதனை. இந்த வெற்றியை பெற்று 50 ஆண்டு நிறைவடைய போகிறது. இதன் நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளன,''என்றார்.
ரசிகர்கள் வரவேற்பு
பைனலில் வெற்றி கோல் அடித்த அசோக் குமார் கூறுகையில்,''இந்திய ஹாக்கியின் வரலாற்று சிறப்புமிக்க நாளாக 1975, மார்ச் 15 அமைந்தது. தாயகம் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த செல்ல நேர்ந்தது. ஜான்சி ரயில்வே நிலையத்தில் (உ.பி.,) இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள என் வீட்டிற்கு செல்ல நான்கு மணி நேரம் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் நுழைந்ததும் தந்தை தயான்சந்த், என் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மறக்க முடியாத தருணம்,''என்றார்.
ரூ. 12 கோடி பரிசு
டில்லியில் இன்று ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் 7வது ஆண்டு விருது வழங்கும் விழா நடக்க உள்ளது. 1975ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஜாம்பவான்கள், 2024, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீரர்கள், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வென்ற ஆண்கள், பெண்கள் அணியினர் கவுரவிக்கப்பட உள்ளனர். தவிர, வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் (ஆண்கள், பெண்கள்), சிறந்த கோல்கீப்பர், தற்காப்பு வீரர், முன்கள வீரர் என 8 பிரிவுகளில் 32 பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் ரூ. 12 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் டிர்கே கூறுகையில்,''திறமையானவர்களை கவுரவிக்க உள்ளோம். நமது வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு விருதுகள் ஊக்கம் அளிக்கும். இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக ரூ. 12 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. சர்வதேச ஹாக்கி அமைப்பின் உறுப்பினராக 1925ல் இந்தியா சேர்ந்தது. இதன் நுாற்றாண்டு விழாவையும் கொண்டாட உள்ளோம்,''என்றார்.
100 வது ஆண்டு
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் தேசிய விளையாட்டு அமைப்பு இது. தற்போது நுாற்றாண்டு கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு புதிய தொடர்கள் நடத்தப்பட உள்ளன.
13 பதக்கம்
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13 பதக்கம் வென்றது.
* 8 தங்கம் (1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980) கைப்பற்றியது.
* 1960ல் வெள்ளி, 1968, 1972, 2021, 2024 என நான்கு முறை வெண்கலம் வென்றது.
52 ஆண்டுக்குப் பின்...
இந்திய ஹாக்கி அணி தனது முதல் ஒலிம்பிக்கில் (1928, ஆம்ஸ்டர்டாம்) தங்கம் வென்றது. கடைசியாக 1980ல் தங்கம் கைப்பற்றியது. அடுத்து 41 ஆண்டுக்குப் பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) வெண்கலம் கைப்பற்றியது.
* கடந்த ஆண்டு பாரிசில் (2024) வெண்கலம் வசப்படுத்திய இந்தியா, ஒலிம்பிக் ஹாக்கியில் 52 ஆண்டுக்குப் பின் தொடர்ந்து இரண்டு வெண்கலம் (2021, 2024) வென்றது. முன்னதாக 1968, 1972 என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தது.