ADDED : ஜூன் 26, 2025 11:06 PM

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் 8வது சுற்றில் அர்ஜுன், பிரக்ஞானந்தாவை சந்தித்தார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 13 வது நகர்த்தலுக்குப் பின் முழு ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா, 29 வது நகர்த்தலில் அர்ஜுனை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் அரவிந்த் சிதம்பரம், ஹங்கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் மோதினர். இதில் அரவிந்த் சிதம்பரம் 44 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
எட்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர்கள் நாடிர்பெக் (5.5), சிந்தரோவ் (5.0) முதல் இரு இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (4.5), அர்ஜுன் (4.5) 3, 4வது இடம், அரவிந்த் சிதம்பரம் (2.0) கடைசி (10) இடத்தில் உள்ளனர்.