/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாரிசை வாட்டும் வெயில்: தவிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரங்கள்பாரிசை வாட்டும் வெயில்: தவிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரங்கள்
பாரிசை வாட்டும் வெயில்: தவிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரங்கள்
பாரிசை வாட்டும் வெயில்: தவிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரங்கள்
பாரிசை வாட்டும் வெயில்: தவிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரங்கள்
ADDED : ஜூலை 31, 2024 12:07 AM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் மழை கொட்டியது. இப்போது வெயில் வாட்டுகிறது. பருவநிலை மாற்றத்தால், விளையாட்டு நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்கள், பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பசுமையான சுற்றுப்புறச்சூழலை வலியுறுத்தி, இங்குள்ள அறைகளில் 'ஏசி' பொருத்தப்படவில்லை. தரைப்பகுதியில் தண்ணீர் 'பைப்' பதித்து இயற்கையான முறையில் 'கூலிங் சிஸ்டம்' அமைக்கப்பட்டுள்ளது. மின்விசிறி வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
பாரிசில் இதமான வானிலை நிலவும் என்பதால், 'ஏசி' இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தாது என கருதப்பட்டது. ஆனால், கடந்த சில நாளாக இங்கு வெயில் கொளுத்துகிறது. 95 டிகிரி 'பாரன்ஹீட்' அளவை கடந்துள்ளது. கால்பந்து, படகுவலித்தல் போட்டி நடக்கும் மார்செய்ல் நகரில் 104 'பாரன்ஹீட்' அளவை தொட்டுள்ளது. வரும் நாளில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் 'ஸ்பிரே' வசதி: போட்டியை காண வரும் ரசிகர்கள் வெப்பத்தால் அவதிப்படுகின்றனர். கையில் சிறிய விசிறி, தலையில் துண்டு அணிந்து வெயிலில் இருந்து தப்புகின்றனர். சாலையில் செல்லும் மக்களுக்காக 'ஹோஸ் பைப்' மூலம் தண்ணீர் 'ஸ்பிரே' செய்யப்படுகிறது. ரயில்வே, பஸ் நிலைங்களில் லட்சக்கணக்கான 'வாட்டர் பாட்டில்கள்' விநியோகிக்கப்பட்டுள்ளன. 'மதிய நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். கையில் 'வாட்டர் பாட்டில்' வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள். தொப்பி அணிந்து கொள்ளுங்கள்' என பாரிஸ் ஒலிம்பிக் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குதிரையேற்ற போட்டியில் பங்கேற்கும் குதிரைகளை குளிர்விக்க, 'வாட்டர் ஸ்பிரே', மின்விசிறி பயன்படுத்தப்படுகிறது.
பயிற்சி பாதிப்பு: கடும் வெப்பத்தால் பயிற்சி எடுக்க முடியாமல் வீரர், வீராங்கனைகள் அவதிப்படுகின்றனர். 'ஐஸ்' நிரப்பப்பட்ட சிறப்பு உடை அணிகின்றனர். ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள தங்களது அறைகளுக்கு 'ஏசி' பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிக தீர்வாக 2,500 'ஏசி' பொருத்தும் பணி நடக்கிறது. பிரான்சில் கடும் வெப்பம் நிலவக்கூடும் என பிரிட்டன் ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்தது. இதை அறிந்து 'ஏசி' உபகரணங்களை எடுத்து வந்த அமெரிக்கா, பின்லாந்து, ஸ்பெயின் நட்சத்திரங்கள் வெயிலில் இருந்து தப்பியுள்ளனர்.
அமெரிக்க வீராங்கனை கோ காப் கூறுகையில்,''வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, 'ஐஸ் டவல்' பயன்படுத்துகிறேன்,''என்றார்
செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கூறுகையில்,''பாரிஸ் வானிலையை கணிக்க முடியவில்லை. காலையில் வெயில் வாட்டுகிறது. மாலையில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கின்றனர்,''என்றார்.