/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழைஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை
ADDED : செப் 01, 2025 11:11 PM

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்தியா 15-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
பீஹாரின் ராஜ்கிர் நகரில், ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன.
'ஏ' பிரிவில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியா, ஏற்கனவே 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தது. கடைசி லீக் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அபிஷேக் 4, சுக்ஜீத் சிங் 3 கோல் அடித்தனர். ஜுக்ராஜ் சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலா 2, ரஜிந்தர் சிங், அமித் ரோஹிதாஸ், சஞ்சய், தில்பிரீத் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி (9) 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தை கைப்பற்றியது.
மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என 'டிரா' ஆனது. புள்ளிப்பட்டியலில் சீனா, ஜப்பான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இதில் கோல் வித்தியாசத்தில் ஜப்பானை (+6) முந்திய சீனா (+11), 2வது இடம் பிடித்து 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தது.
மலேசியா அபாரம்: 'பி' பிரிவு லீக் போட்டியில் மலேசியா, சீனதைபே அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த மலேசியா 15-0 என்ற கணக்கில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா 5-1 என, வங்கதேசத்தை வீழ்த்தியது. முடிவில், 'பி' பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த மலேசியா (9 புள்ளி), தென் கொரியா (6) அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறின.