ADDED : ஜூன் 11, 2024 11:53 PM

தோஹா: உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில், இந்திய அணி 1-2 என கத்தாரிடம் வீழ்ந்தது.
உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதின.
நேற்று கடைசி சுற்று போட்டி நடந்தன. தோஹாவில் நடந்த போட்டியில் உலகத் தரவரிசையில் 121 வது இடத்திலுள்ள இந்தியா, 34 வது இடத்தில் இருந்த வலிமையான கத்தார் அணியை சந்தித்தது. போட்டியின் 37வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் பிரண்டன் பெர்னாண்டஸ் கொடுத்த பந்தை பெற்ற சாங்டே, அப்படியே இடது காலால் உதைத்து கோலாக மாற்றினார்.
முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கத்தார் அணியின் யூசுப், 73வது நிமிடம் ஒரு கோல் அடிக்க, 85வது நிமிடம் அல்ராவி ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் குவைத் அணி 1-0 என ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
குவைத் தகுதி
'ஏ' பிரிவில் கத்தார் (16 புள்ளி), குவைத் (7) அணிகள் முதல் இரு இடம் பிடித்து, உலக கோப்பை ஆசிய பிரிவு மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறின. இந்திய அணி 6 போட்டியில் 1ல் மட்டும் வென்றது. 2 'டிரா' செய்து, 3ல் தோற்று, 5 புள்ளியுடன் 3வது இடம் பெற்றது. ஆப்கானிஸ்தான் (5) கடைசி இடம் பிடித்தது.
பாலஸ்தீனம் அபாரம்
ஆசிய பிரிவு இரண்டாவது சுற்றில் 'ஐ' பிரிவில் நேற்று கடைசி கட்ட தகுதி போட்டி நடந்தன. ஏற்கனவே 3வது சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா (6 போட்டி, 6 வெற்றி, 18 புள்ளி), நேற்று பெர்த்தில் நடந்த போட்டியில் 5-0 என பாலஸ்தீனத்தை வென்றது.
இருப்பினும் பாலஸ்தீனம் (6ல் 2 வெற்றி, 2 தோல்வி, 2 'டிரா', 8 புள்ளி) 2வது இடம் பெற்று, முதன் முறையாக 3வது சுற்றுக்கு முன்னேறியது. கடந்த எட்டு மாதமாக ஹமாஸ்-இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீனம். 1998 முதல் 'பிபா' உறுப்பினராக உள்ள போதும், பாலஸ்தீனத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா அங்கீகரிக்க மறுக்கின்றன.
ஆனால் கடைசி 5 போட்டியில் எதிரணிக்கு 1 கோல் கோல் மட்டும் விட்டுக் கொடுத்தனர். மன உறுதியுடன் போராடி உலக கோப்பை வாய்ப்பை அதிகரித்துள்ளனர்.