/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ருமேனியாவிடம் வீழ்ந்தது உக்ரைன் * யூரோ கோப்பை கால்பந்தில்...ருமேனியாவிடம் வீழ்ந்தது உக்ரைன் * யூரோ கோப்பை கால்பந்தில்...
ருமேனியாவிடம் வீழ்ந்தது உக்ரைன் * யூரோ கோப்பை கால்பந்தில்...
ருமேனியாவிடம் வீழ்ந்தது உக்ரைன் * யூரோ கோப்பை கால்பந்தில்...
ருமேனியாவிடம் வீழ்ந்தது உக்ரைன் * யூரோ கோப்பை கால்பந்தில்...
ADDED : ஜூன் 17, 2024 11:05 PM

முனிக்: யூரோ கோப்பை கால்பந்தில் ருமேனிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது.
ஜெர்மனியில் ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று முனிக்கில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் 'பிபா' தரவரிசையில் 22 வது இடத்திலுள்ள உக்ரைன் அணி, 46 வது இடத்திலுள்ள ருமேனியாவை எதிர்கொண்டது.
போட்டியின் 7 வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ஆர்டெம் கொடுத்த பந்தை வாங்கிய விக்டர், இடது காலால், வலையை நோக்கி அடித்தார். இதை ருமேனிய கோல் கீப்பர் புளோரின் நிடா தடுத்தார். 29 வது நிமிடம் டென்னிஸ் மான் கொடுத்த 'பாசை' பெற்ற நிக்கோல் ஸ்டான்சியு, வலது காலால் அடித்து கோலாக மாற்றினார். முதல் பாதியில் ருமேனியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 46 வது நிமிடம் ருமேனியாவின் புளோரினல் கோமன் அடித்த பந்து கோல் போஸ்டுக்கு இடதுபுறமாக விலகிச் செல்ல, வாய்ப்பு நழுவியது.
போட்டியின் 53வது நிமிடத்தில் மைதானத்தின் கிட்டத்தட்ட சரிபாதி துாரத்தில் பந்தை பெற்ற ராஸ்வன் மரின், அங்கிருந்து அப்படியே கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். உக்ரைன் கோல் கீப்பர் ஆன்ட்ரி லுனின் தடுக்க முயன்ற போதும், அவரது கைகளுக்கு கீழாகச் சென்று கோலாக மாறியது.
அடுத்தடுத்து கோல்
இந்த அதிர்ச்சியில் இருந்து உக்ரைன் மீள்வதற்குள், ருமேனிய வீரர்கள் மற்றொரு கோல் அடித்தனர். இம்முறை கார்னர் வாய்ப்பில் டென்னிஸ் மான் பந்தை, உக்ரைன் கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார். அங்கு மின்னலாக பாய்ந்து வந்த ருமேனிய வீரர் டெனிஸ் டிராஸ்கஸ் (57 வது நிமிடம்), வலது காலால் உதைக்க, கோலாக மாறியது.
இதன் பின் உக்ரைன் அணியினர் பலமுறை முயற்சித்த போதும், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் ருமேனிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அபாரம்
'சி' பிரிவு போட்டியில் உலகத்தரவரிசையில் 4வது இடத்திலுள்ள இங்கிலாந்து அணி, 33வது இடத்திலுள்ள செர்பியாவை சந்தித்தது. போட்டி துவங்கிய 13வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம், தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். 77 வது நிமிடம் இங்கிலாந்தின் ஹாரி கேன், தலையால் முட்டிய பந்தை செர்பிய கோல் கீப்பர் ராஜ்கோவிச் தடுத்தார். 82வது நிமிடம் செர்பிய வீரர் துஷான் அடித்த பந்தை இங்கிலாந்தின் பிக்போர்டு தடுக்க, சமன் செய்யும் வாய்ப்பு நழுவியது. முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என வெற்றி பெற்றது.
'ரஷ்யாவுக்கு' தடை
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, யூரோ கால்பந்து தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஷ்ய ரசிகர்கள், தங்களது தேசியக் கொடியுடன் மைதானத்தில் போட்டிகளை பார்த்து வருகின்றனர். ஜெர்மனி, செர்பியா போட்டிகளில் ரஷ்ய கொடிகளை பறக்கவிட்டனர். நேற்று உக்ரைன் போட்டிக்கு முன், ரஷ்ய கொடிகளை அகற்ற ஐரோப்பிய கால்பந்து சங்கம் சார்பில், காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.