ADDED : ஜூன் 19, 2024 11:54 PM

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து வில்லியம்சன் விலகினார்.
நியூசிலாந்து ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் 33, இருந்தார். வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் 'டி-20' உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி லீக் சுற்றோடு திரும்பியது. இதனையடுத்து ஒருநாள், 'டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வில்லியம்சன் தெரிவித்தார். தவிர இவர், 2024-25 சீசனுக்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தப்பட்டியலில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார்.
இதுவரை 100 டெஸ்ட், 165 ஒருநாள், 93 'டி-20' போட்டிகளில் பங்கேற்ற வில்லியம்சன், 40 டெஸ்ட், 91 ஒருநாள், 75 'டி-20' போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். நியூசிலாந்து அணியை மூன்று முறை உலக கோப்பை பைனலுக்கு (2015, 2019ல் 50 ஓவர், 2021ல் 'டி-20') அழைத்துச் சென்ற வில்லியம்சன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021) பட்டம் பெற்றுத்தந்தார்.
இதுகுறித்து வில்லியம்சன் கூறுகையில், ''நியூசிலாந்துக்காக விளையாடுவது மிகப் பெரிய கவுரவம். நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து இம்முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்துக்காக தொடர்ந்து விளையாடுவேன். வாய்ப்பு கிடைத்தால் வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளிலும் பங்கேற்பேன். நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு என்னால் முடிந்ததை திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். இனிவரும் நாட்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க உள்ளேன்,'' என்றார்.