Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தலையா... கடல் அலையா

தலையா... கடல் அலையா

தலையா... கடல் அலையா

தலையா... கடல் அலையா

ADDED : ஜூலை 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
மும்பை: உலக கோப்பை வென்ற இந்திய அணியினர் நேற்று மதியம் டில்லியில் இருந்து கிளம்பி, மாலை மும்பை வந்தனர். கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா கோப்பையை ஏந்தியபடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.

பின் அங்கிருந்து மரைன் டிரைவ் பகுதியில் உள்ள நாரிமன் பாய்ன்ட் பகுதிக்கு சென்றனர். இங்கு தயாராக நின்றிருந்த 'ஸ்பெஷல்' பஸ்சில் வீரர்கள் ஏற, வெற்றிப் பேரணி துவங்கியது.

'இந்தியா சாம்பியன்' என பொறிக்கப்பட்ட ஸ்பெஷல் ஜெர்சியுடன் வீரர்கள் பஸ்சின் மேற்பகுதியில் நின்று வந்தனர். சாலையில் இருபுறமும் திரண்ட ரசிகர்கள், தேசியக் கொடியுடன் 'வந்தே மாதரம்...' என பாடினர்.

வழக்கமாக மரைன் டிரைவ் பகுதியில் இருந்து 5 நிமிடத்தில் மைதானத்தை அடைந்து விடலாம். ஆனால் மக்கள் வெள்ளத்தில் பஸ் ஊர்ந்து தான் சென்றது. இதனால் மைதானம் செல்ல 1 மணி நேரம், 6 நிமிடம் தேவைப்பட்டது.

இங்கு நடந்த விழாவில் ரோகித், பயிற்சியாளர் டிராவிட், கோலி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின் பி.சி.சி.ஐ., சார்பில் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ரூ. 125 கோடி

'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று மைதானத்தில் இதற்கான 'செக்' வீரர்களிடம் வழங்கப்பட்டது.

எட்டாவது அதிசயம் பும்ரா

கோலி கூறுகையில்,''உலக கோப்பை வென்றதும், ரோகித்தை கட்டிப்பிடித்தேன். இது, கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தருணமாக எப்போதும் இருக்கும். அதேபோல, இந்த தலைமுறையின் சிறந்த பவுலர் பும்ரா. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி கட்ட ஓவர்களில் அசத்தினார். உலகின் எட்டாவது அதிசயம் பும்ரா,'' என்றார்.

ஹர்திக்கிற்கு பாராட்டு

உலக கோப்பை பைனலில், மில்லரை 'கேட்ச்' செய்த சூர்யகுமாரை பாராட்டிய ரோகித், கடைசி ஓவரில் அசத்திய பாண்ட்யாவையும் பாராட்டினார். உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 'ஹர்திக்... ஹர்திக்' என கோஷமிட்டனர்.

* ஐ.பி.எல்., தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் பாண்ட்யாவுக்கு, மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று அதே வான்கடே மைதானத்தில், பாண்ட்யாவை பாராட்டி குரல் எழுப்பினர். பல ரசிகர்கள் பாண்ட்யாவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தனர்.

சக்தே... இந்தியா

வீரர்கள் வான்கடே மைதானத்தை அடைந்ததும் சக்தே இந்தியா பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் ரோகித், ஜடேஜா, பாண்ட்யா உட்பட அனைத்து வீரர்களும், கேலரியில் ரசிகர்களும் நடனம் ஆடினர்.

அடுத்து தேசிய கீதத்துடன் பாராட்டு விழா துவங்கியது. முதலில் ரோகித் சர்மா பேசினார். அப்போது எழுந்த ரசிகர்கள் சப்தம் விண்ணை முட்டியது. இதனால் பேச முடியாமல் தவித்தார் ரோகித்.

ரோகித் எழுச்சி

கடந்த 2022, 'டி-20' உலக கோப்பை தொடர் அரையிறுதியில் இந்தியா தோற்றது. இதன் பின் பாண்ட்யா தலைமையில் புதிய 'டி-20' அணி போட்டிகளில் பங்கேற்றது. ரோகித், கோலி சர்வதேச 'டி-20' போட்டிகளில் பங்கேற்கவில்லை. இனி ரோகித் அவ்வளவு தான் என முடிவு செய்த மும்பை ஐ.பி.எல்., அணி நிர்வாகம், பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது.

2023, ஒருநாள் உலக கோப்பை தொடரில் பாண்ட்யா காயம் அடைந்தார். துணைக் கேப்டன் சூர்யகுமாரும் காயத்தால் விலகினார். வேறு வழியில்லாத நிலையில் ரோகித்தை மீண்டும் 'டி-20' கேப்டனாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நியமித்தது. இது 'டி-20' உலக கோப்பை தொடர் வரை தொடரும் என அறிவித்தது. மறுபடியும் கோலி, ஜடேஜா களமிறங்கினர்.

இருப்பினும், பாண்ட்யாவின் மும்பை அணியில் ரோகித், 'இம்பேக்ட்' வீரராக களமிறங்கி விளையாடினார். தற்போது, வெஸ்ட் இண்டீசில் சிறப்பாக செயல்பட, இந்தியா 17 ஆண்டுக்குப் பின் மீண்டும் 'டி-20' உலக சாம்பியன் ஆனது. வெற்றிக் கோப்பையுடன், மீண்டும் கேப்டன் ரோகித், வான்கடே மைதானத்தில் வந்தது உண்மையில் 'ஸ்பெஷலான' தருணம் தான்.

2007க்குப் பின்...

கடந்த 2007ல் நடந்த முதல் 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது. அப்போது தோனி தலைமையில் மும்பையில் திறந்தவெளி பஸ்சில் வீரர்கள் ஊர்வலம் நடந்தது. தற்போது 17 ஆண்டுக்குப் பின் நேற்று மீண்டும் வெற்றி ஊர்வலம் நடந்தது.

வந்தே மாதரம்...

சாலையில் இருபுறமும் திரண்ட ரசிகர்கள், தேசியக் கொடியுடன் 'வந்தே மாதரம்...' கோஷம் எழுப்பினர்.

அர்ஷ்தீப் நடனம்

வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜடேஜா உள்ளிட்டோருடன், நடனம் ஆடி மகிழ்ந்தார்.

ரோகித்-கோலி கொண்டாட்டம்

பஸ்சில் கோலியிடம் உலக கோப்பையை கொடுத்த பாண்ட்யா, ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் 'இந்தியா... இந்தியா' என குரல் எழுப்பினர்.

அப்போது சூர்யகுமார் ரசிகர்களை பார்த்து,' கோலி, ரோகித் பெயர்களை சொல்லுங்கள், 'டி-20'ல் இருந்து ஓய்வு பெற்ற அவர்களுக்கு மரியாதை கொடுங்கள்,' என்றார். பின் கோலி, ரோகித் இணைந்து உலக கோப்பையை காட்டி, ரசிகர்கள் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டனர். ரோகித், பயிற்சியாளர் டிராவிட் என இருவரும் கட்டிப்பிடித்து, தங்கள் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் ஜெய்ஷா

பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா, துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய வீரர்கள் போல ஜெர்சி அணிந்து, பஸ்சில் பயணம் செய்தனர்.



பி.சி.சி.ஐ., நன்றி

பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில்,'உலக சாம்பியனை வரவேற்க திரண்ட லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி,' என தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் ஓரம்...

மகாராஷ்டிராவின் முக்கிய பகுதி நாரிமன் பாய்ன்ட். தெற்கு மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பகுதியின் முடிவில் துவங்குகிறது. அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ள இங்குள்ள சாலையில், நேற்று ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். இதனால் பொதுமக்கள் இப்பகுதியில் போக்குவரத்தை தவிர்க்குமாறு, போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

'வாட்டர் சல்யூட்'

மும்பை தீயணைப்பு துறை சார்பில் நேற்று வீரர்களுக்கு 'வாட்டர் சல்யூட்' செய்யப்பட்டது. இதன் படி, வீரர்கள் விமானம் மும்பையில் தரையிறங்கியவுடன், தீயணைப்பு வாகனங்களால், விமானத்தின் மீது நீரை பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தினர்.

சிறப்பு பெயர்

இந்திய வீரர்கள் பயணம் செய்த விமானத்திற்கு சிறப்பு பெயர் வைத்து கவுரவப்படுத்தினர். பார்படாசில் இருந்து டில்லி வந்த விமானத்துக்கு 'ஏஐசி24டபிள்யு.சி.,' (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 வேர்ல்டு கப்') என பெயரிடப்பட்டது.

* டில்லி டூ மும்பை விமானத்திற்கு 'UK1845' என பெயரிடப்பட்டு இருந்தது. கோலி (18), ரோகித்தை (45) கவுரவிக்கும் வகையில், அவர்களது 'ஜெர்சி' எண்களால் விமானம் அழைக்கப்பட்டது.

தாமதம் ஏன்

டில்லியில் இருந்து மதியம் 3:42 மணிக்கு தான் வீரர்கள் விமானம் கிளம்பியது. மாலை 5:30 மணிக்குத் தான் மும்பை விமான நிலையம் வந்தது. இதனால், 5:00 மணிக்குப் பதில் 2 மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக, 7:35 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. 8:41 மணிக்கு ஊர்வலம் வான்கடே மைதானத்தை அடைந்தது.

ஸ்பெஷல் பஸ்

வீரர்கள் வெற்றி பவனி செல்ல 'சாம்பியன்ஸ் 24' என்ற பெயருடன், திறந்த வெளி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் இரு பக்கத்தில், வீரர்கள் உலக கோப்பை ஏந்திய தருணம் இடம் பெற்றிருந்தது.

நிரம்பிய வான்கடே

இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையம் வருவதற்கு முன்பே, மும்பை தெருக்களில் ரசிகர்கள் திரண்டனர். வான்கடே மைதானம் மாலை 4:00 மணிக்கு ரசிகர்களுக்காக திறக்கப்பட்டது (இலவசம்). அடுத்த சில மணி நேரங்களில் மைதானம் நிரம்பியது. மழை பெய்த போதும் ரசிகர்கள் நனைந்து கொண்டே, சாம்பியன்களை வரவேற்றனர்.

வரவேற்ற மழை

காலையில் டில்லியில் லேசான மழை, மாலையில் மாலை மும்பையில் மழை பெய்தது. இருப்பினும் ரசிகர்கள் குடையுடன், சாம்பியன்களை வரவேற்க திரண்டனர்.

மும்பை ராஜா... ரோகித்

வான்கடே மைதானத்தில் 2014ல் சச்சின் ஓய்வு பெற்ற போது, எழுந்த 'சச்சின்... சச்சின்' என்ற ரசிகர்கள் குரல் ஒலித்தது. இதுபோல நேற்று ரோகித்... ரோகித் என அழைத்தனர். தவிர 'மும்பை ராஜா... ரோகித்' என உற்சாக குரல் எழுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us