/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சூர்யகுமார் விளாசல்... இந்தியா அசத்தல் * இலங்கை அணி தோல்விசூர்யகுமார் விளாசல்... இந்தியா அசத்தல் * இலங்கை அணி தோல்வி
சூர்யகுமார் விளாசல்... இந்தியா அசத்தல் * இலங்கை அணி தோல்வி
சூர்யகுமார் விளாசல்... இந்தியா அசத்தல் * இலங்கை அணி தோல்வி
சூர்யகுமார் விளாசல்... இந்தியா அசத்தல் * இலங்கை அணி தோல்வி
ADDED : ஜூலை 27, 2024 11:17 PM

பல்லேகெலே: முதல் 'டி-20' போட்டியில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில், இலங்கையை வீழ்த்தியது. கேப்டன் சூர்யகுமார் அரைசதம் விளாசினார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பல்லேகெலேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் அசலங்கா பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஜோடி துவக்கம் கொடுத்தது. இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர் (4 ஓவர், 51/0 ரன்). சுப்மன் கில் 16 பந்தில் 34 ரன் எடுத்து, மதுஷங்கா பந்தில் வீழ்ந்தார். ஹசரங்கா, தனது முதல் ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வாலை (40) வெளியேற்றினார்.
அடுத்து சூர்யகுமார், ரிஷாப் பன்ட் இணைந்தனர். மதுஷங்கா வீசிய போட்டியின் 7 வது ஓவரின் கடைசி 3 பந்தில் சூர்யகுமார் சிக்சர், 2 பவுண்டரி என விளாசினார். இந்திய அணி 9 ஓவரில் 102/2 ரன் குவித்தது. சூர்யகுமார், 22 வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 26 பந்தில் 58 ரன் எடுத்த போது, பதிரானா பந்தில் அவுட்டானார்.
ரிஷாப் அபாரம்
இதன் பின் அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. பின் சுதாரித்துக் கொண்ட ரிஷாப், அசிதா ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி என அனுப்பினார். மறுபக்கம் ஹர்திக் பாண்ட்யா (9), ரியான் பராக் (7) என இருவரும் பதிரானா வேகத்தில் கிளம்பினர். மறுபக்கம் பதிரானா பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த ரிஷாப் (49) அவரது வேகத்திலேயே வீழ்ந்தார்.
ரிங்கு சிங் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் அக்சர் படேல் (10) சிக்சர் அடித்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன் குவித்தது. பதிரானா 4 விக்கெட் சாய்த்தார்.
நிசங்கா மிரட்டல்
கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு நிசங்கா, குசல் மெண்டிஸ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த போது குசல் மெண்டிஸ் (45), அர்ஷ்தீப் பந்தில் அவுட்டானார். நிசங்கா 34 வது பந்தில் அரைசதம் கடந்தார். கடைசி 36 பந்தில் 74 ரன் தேவைப்பட, இலங்கை கைவசம் 9 விக்கெட் இருந்தது.
இந்நிலையில் நிசங்கா (79) அவுட்டாக, இலங்கை சரிவு துவங்கியது. குசல் மெண்டிஸ் (45), கமிந்து (12) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். இலங்கை அணி 19.2 ஓவரில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.